×

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு: சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில் பல கோடி ஆவணங்கள் சிக்கின

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்த வழக்கு தொடர்பாக சென்னை, கரூரில் உள்ள அவரது வீடு, அலுவலகங்கள் உள்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 25.56 லட்சம் ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், முதலீடுகளுக்கான ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரும் தற்போதைய அமைச்சருமான செந்தில்பாலாஜியிடம் தோல்வி அடைந்தார். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத் துறையில் பணி நியமனம், பேருந்துகள் கொள்முதல், உதிரிபாகங்கள் வாங்கியது, குறிப்பிட்ட நிறுவனங்களிடம்தான் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் வாங்க வேண்டும் என கூறியது உள்ளிட்ட பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு சென்றது.

இதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி உத்தரவின்பேரில் ஐஜி பவானீஸ்வரி, எஸ்.பி. சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் வருமானத்துக்கு அதிகமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்து குவித்திருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று முன்தினம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சமி, சகோதரர் சேகர், பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், உறவினர்கள், உதவியாளர்கள் மீது 2021 பிரிவு 13(2),13(1)(பி), 2018 மற்றும் 12,13(2), 13(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, 26 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நேற்று காலை 7 மணிக்கு சென்னை உள்பட 26 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையை பொருத்தவரை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சாய் கிருபா அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, பெருங்களத்தூரில் உள்ள அவரது உதவியாளர் பாலசுப்பிரமணியன் வீடு, வில்லிவாக்கம் 3வது எம்டிஎச் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் வசித்து வரும் அவரது நண்பர் ரவிக்குமாருக்கு சொந்தமான வீடு, மேற்கு மாம்பலம் ராமகிருஷ்ணாபுரம் கோகுலம் காலனியில் உள்ள டெடி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உள்பட 6 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.

இந்த சோதனையின்போது சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள  வீட்டில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தார். அப்போது அவரிடம், அமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பு இருந்த சொத்துக்கள் மதிப்பும், அமைச்சராக இருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு சேர்த்த சொத்துக்கள் மதிப்பும்  குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் 26 இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்காய்வு செய்த போது, 10 மடங்கிற்கு மேல் சொத்துக்கள் உயர்ந்து இருந்தது தெரியவந்தது. குறிப்பாக கடந்த 5 ஆண்டு காலத்தில் அவரது மனைவி, அவரது சகோதரர் சேகர் மற்றும் உறவினர்கள், பினாமிகள் பெயரில் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பது தெரியவந்துள்ளது.

 இதனால் எந்த வருமானத்தில் இந்த  சொத்துக்கள் வாங்கப்பட்டது, அதற்கான வருமானம் என்ன என்பது உள்ளிட்ட  கேள்விகளை கேட்டு  எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அதேநேரத்தில், 10 டிஎஸ்பிக்கள் தலைமையில் 200 போலீசார் வாகனங்களில் நேற்று காலை 7 மணிக்கு கரூர் வந்தனர். பின்னர் அவர்கள் தனித்தனிக் குழுக்களாக பிரிந்து சரஸ்வதி நகரில் உள்ள  விஜயபாஸ்கரின் வீடு, செல்வம் நகரில் உள்ள அவரது சாயப்பட்டறை மற்றும் மூன்று  அலுவலகங்களில் சோதனை நடத்தினர். முன்னெச்சரிக்கையாக சாயப்பட்டறை  மற்றும் அலுவலகங்களை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் அவரது ஆதரவாளர்கள் வெளியே நிறுத்தப்பட்டு இருந்தனர். இதுதவிர எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி சேகர் குடியிருக்கும் ஆண்டாங்கோயில் அபார்ட்மெண்ட்ஸ், வடிவேல் நகர் மில்கேட் அருகே உள்ள தறிப்பட்டறை வளாகம்  ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. கரூர் ராமானுஜம் நகரில் உள்ள அதிமுக பிரமுகரும், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பினாமி என கூறப்படும் பரமசிவம் வீடு, கரூர் தோரணக்கல்பட்டி பகுதியில் குடியிருந்து  வரும் முன்னாள் நகராட்சி கவுன்சிலரும், நில புரோக்கருமான ஏகாம்பரம் ஆகியோர் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் அவரது உதவியாளராகஇருந்த பாலசுப்ரமணியனின் ஆத்தூர் நத்தமேடு பகுதியில் உள்ள வீடு, மற்றொரு உதவியாளர் கார்த்திகேயன் குடியிருந்து வரும் கரூர் முத்து நகர் பகுதியில் உள்ள வீடு, மற்றொரு உதவியாளர் உப்பிடமங்கலம் ஜோதிவடத்தில் உள்ள ரமேஷ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல் மற்றொரு நிலப்புரோக்கரான சேகரின் கரூர்-திண்டுக்கல் பைபாஸ் சாலை ஆட்டையம்பரப்பு பகுதியில் உள்ள வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பாளையம் பகுதியில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கல்குவாரிக்கு சொந்தமான மூன்று அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. கரூர் நகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினர்கள், உதவியாளர்கள்,  நிலப்புரோக்கர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை உள்பட 26 இடங்களில் 17க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை முடிந்தாலும் 9க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று இரவு 9.30 வரை சோதனை நடந்தது. நேற்று நடந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும்  நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் வீட்டில் 50 சவரன் நகை, இரண்டரை கிலோ வெள்ளிப் பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பதிவு செய்து கொண்டு திருப்பி அளித்தனர். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தபிறகு, அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தவர்கள் பட்டியலில், முதல் முறையாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை அக்கட்சி வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

* லாக்கருக்கு சீல்
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பெயரிலோ, மனைவி பெயரிலோ தனியாக வங்கிக் கணக்கு வைத்திருக்கவில்லை. அனைத்து பரிவர்த்தனைகளும் கம்பெனி மூலமே நடந்துள்ளது. கம்பெனிக்குத்தான் கணக்குகள் இருந்தன. வங்கி லாக்கரும் கம்பெனி பெயரில்தான் உள்ளன. இதனால் கணக்குகளை அதிகாரிகள் முடக்கினர். இந்த சோதனை முடிந்த பிறகு கணக்கு விபரங்களை பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

* ஸ்டிக்கர் கம்பெனியில் ரெய்டு
கடந்த ஆட்சியின் இறுதியில் புதிய வாகனங்கள் அனைத்திலும் உள்ள மின்விளக்கில் ஒட்டப்படும் ஸ்டிக்கரை சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள டெடி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியில் இருந்துதான் வாங்க வேண்டும் என்று விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருந்தார். இதனால் இந்த கம்பெனியிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

* சொத்து சேர்த்ததாக தேர்தல் பிரசாரத்தில் குற்றச்சாட்டு
கடந்த  அதிமுக ஆட்சியில் வெற்றி பெற்று போக்குவரத்து அமைச்சரானதும் கட்சியில் தன்னை எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலைப்படுத்தி வந்தார். ஆனால் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் நின்று, தி.மு.க. வேட்பாளரும் தற்போதைய மின்துறை அமைச்சரான செந்தில்பாலாஜியிடம் தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் அவர் விரக்தியில் இருந்து வந்தார். குறிப்பாக, சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பரபரப்பு குற்றம்சாட்டி பல்வேறு கட்சியினர் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : AIADMK ,minister ,MR Vijayabaskar , Vigilance raid at 26 places owned by AIADMK ex-minister MR Vijayabaskar: Millions of documents seized during raid
× RELATED அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு...