டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: அமெரிக்க பிரஜைகளுக்கு தூதரகம் எச்சரிக்கை

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதால், அமெரிக்க பிரஜைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும்நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டங்களை நடத்திவரும் விவசாய அமைப்புகள் இன்று ​​முதல் வரும் ஆக. 9ம் தேதி வரை டெல்லி ஜந்தர் மந்தரில் ‘கிசான் சன்சாத்’ போராட்டம் நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளன. இன்று முதல் சிங்கு எல்லையில் இருந்து 200 போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிப்பதற்காக தலைநகரில் ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, டெல்லி காவல்துறை கூட்டாக கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஜூலை 21 (நேற்று) மற்றும் 22ம் தேதிகளில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் விவசாயிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதாக அறிவித்துள்ளனர். கடந்த காலங்களில் இதுபோன்ற போராட்டங்களில் வன்முறை சம்பவம் நடந்துள்ளது. டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தெருக்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் அதிகளவில் குவிய வாய்ப்புள்ளதால், அமெரிக்க பிரஜைகள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டும். டெல்லி காவல் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories:

>