×

பாலம் பிரச்சனை எதிரொலி உத்தப்புரத்தில் கலெக்டர் அதிரடி ஆய்வு-இருதரப்பினரின் குறைகளை கேட்டறிந்தார்

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரம் பொட்டல்பட்டியில் பாலம் அமைக்க ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்பட்டி கடந்த 19ம் தேதி பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இதனை எதிர்த்து ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 14 பேரை எழுமலை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அப்பகுதியை சேர்ந்த அழகுமணி என்பவர் தலைமையில் புகார் மனு அளித்தனர். அதில், போலீசார் அத்துமீறி நடப்பதாகவும், சம்மந்தப்பட்ட இடத்தை நேரடியாக கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று கலெக்டர் அனீஷ்சேகர் உத்தப்புரம் பொட்டல்பட்டியில் பாலம் அமைக்கும் பணியை நேரடியாக ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட காவல்துறை எஸ்பி பாஸ்கரன், ஊரக வளர்ச்சித்துறை ஏடி செல்லத்துரை, உசிலம்பட்டி ஆர்டிஓ ராஜ்குமார் ஆகியோர் வந்திருந்தனர். இதையடுத்து இருபிரிவினர் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது உத்தப்புரத்தை சேர்ந்த கருப்பணன் மகன் பாக்கியம்(54) என்பவர், கால்களில் காயங்களுடன் எந்த வேலையும் செய்ய முடியாமல் உள்ளதால் உதவித்தொகை வழங்க வேண்டும் என மனு கொடுக்க வந்தார். அவர் திடீரென கலெக்டர் முன்பு தடுமாறி கீழே விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி விட்டனர். அவருக்கு உடனடியாக உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டுக்கொண்டார். மேலும் இப்பகுதியில் பொதுக்கழிப்பறை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரியும், புதியதாக 100 நாள் வேலை அட்டை வழங்க வேண்டும் எனவும் பெண்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் கண்மாய்க்கு செல்லக்கூடிய நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டார். ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் பேரையூர் தாசில்தார் சாந்தி, டிஎஸ்பி நல்லு, சேடபட்டி யூனியன் ஆணையாளர்கள் ராமர், சரஸ்வதி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Collector Action Investigation ,Uthappuram , Usilampatti: A section is protesting against the construction of a bridge at Uthappuram Pottalpatti near Ezhumalai in Madurai district.
× RELATED உத்தப்புரத்தில் போலீசார் மீது தாக்குதல்