×

கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்மாய்களில் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வார வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

வருசநாடு :கடமலை மயிலை ஒன்றியத்தில் 13 கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடமலை மயிலை ஒன்றியத்தில் வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாய், கண்டமனூர் புதுக்குளம்கண்மாய், நரியூத்து செங்குளம்கண்மாய் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பொதுப்பணித்துறை மற்றும் மயிலாடும்பாறை யூனியன் பராமரிப்பில் உள்ளன. மேற்கண்ட கண்மாய்களில் தனியார் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால் கண்மாய்களில் போதிய அளவில் தண்ணீரை சேமிக்க முடியவில்லை.

இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு தேவையான பாசன நீர் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து வருகிறது. மேலும் இந்த கண்மாய்களில் உரிய முறையில் தூர்வாராததால், புதர் மண்டி கிடக்கிறது. இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி, மேற்கண்ட கண்மாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து கண்டமனூர் அங்குசாமி கூறுகையில், ‘மேற்கண்ட கண்மாய்களில் அக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஆனால் 13 கண்மாய்களில் ஒரு சிலவற்றில் மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. பிற கண்மாய்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாருவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Katamalai Peacock Union , Varusanadu: Farmers demand removal of encroachments on 13 eyelids in Kadamalai Mayilai Union
× RELATED கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை