×

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி உள்ளிட்ட காங். எம்.பி.க்கள் தர்ணா..!!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்த தர்ணா நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், ராகுல்காந்தி தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சி. வேணுகோபால், மனிஷ் திவாரி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், திருநாவுக்கரசர் உள்ளிட்ட எம்.பி.க்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அனைத்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். அவர்கள் SAVE COUNTRY, SAVE FARMERS என்ற பதாதைகளை கையில் ஏந்தியும், மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜந்தர் மந்தர் பகுதியில் இன்றைய தினம் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடவிருக்கின்றனர்.

டெல்லியின் எல்லை பகுதிகளிலும் போராட்டமானது தீவிரமடைந்திருக்கிறது. தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரக்கூடிய நிலையில் காங்கிரஸ் கட்சியும் தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் பல்வேறு பிரச்னைகளால் அமளி ஏற்பட்டிருக்கிறது.


Tags : Rahul Gandhi , Farmer, Struggle, Parliamentary Complex, Rahul Gandhi, Dharna
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...