பாணாவரம் நேரடி கொள்முதல் நிலையத்தில் தேங்கிக்கிடக்கும் நெல் குவியல்களை கொள்முதல் செய்ய வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

பாணாவரம் :பாணாவரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக்கிடக்கும் நெல் குவியல்களை விரைவாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ராணிப்பேட்டை மாவட்டம்,  பாணாவரம் அடுத்த மகேந்திரவாடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு குப்புகல்மேடு, வெளிதாங்கிபுரம், மோட்டூர், பாலகிருஷ்ணாபுரம், சிறுவளையம், கர்ணாவூர், கல்வாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில், கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக நெல் மணிகளை தினமும் கொண்டு வந்து குவித்து இரவும், பகலுமாக விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். நெல் மணிகள் கடந்த ஒரு மாதமாக கொள்முதல் செய்யப்படாததால் ஆங்காங்கே தார்ப்பாய்கள் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. தினமும் மழை பெய்து வரும் நிலையில் நெல்களை வெயிலில் உலர்த்தி பராமரித்து, பாதுகாத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நெல் குவியல்கள் மழையில் நனைந்து சேதமாகி முளைத்துள்ளன. இதனால், போட்ட முதலை எடுக்க முடியுமா? என்ற கேள்வி குறியுடன் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இட பற்றாக்குறை நிலவுவதால் சாலையில் நெல் குவியல்களை கொட்டி வைத்துள்ளனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொண்டு வந்து கடந்த ஒரு மாதமாக காத்திருக்கிறோம்.

கொள்முதல் நிலையத்தை திறக்காமல் மூடியுள்ளனர். அதிகாரிகளிடம் கேட்டால் நெல் கொள்முதல் செய்ய உத்தரவு வரவில்லை என்று கூறுகின்றனர். தினமும் மழை பெய்வதால் நெல் குவியல்கள் சேதமாகி முளைத்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக காத்திருப்பதால் எங்களின் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மூடப்பட்ட கொள்முதல் நிலையத்தை  திறந்து விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள நெல் குவியல்களை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>