அங்கன்வாடி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது-ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே அங்கன்வாடி கட்டிடத்தின்  மேற்கூரை  இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இந்த அங்கன்வாடி  மையத்தில் சுற்றுப்பகுதியில் உள்ள  சுமார் 20 பேருக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால், அங்கன்வாடி மையம் செயல்படாமல் இருந்து வருகிறது. மேலும் இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் மண்டலவாடி அங்கன்வாடி மையம் கட்டிடம் மேற்கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பள்ளியில் சத்தம் கேட்டதை அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அங்கன்வாடி கட்டிடத்தில் மேற்கூரை கீழே விழுந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், பள்ளியில் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த அங்கன்வாடி மையத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More