காபந்து அரசால் வழங்கப்பட்ட சென்னை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளரின் பணி நீட்டிப்பு ரத்து:தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வந்தவர்கே.பி.விஜயகுமார்.  இவர் நிர்வாக வசதிக்காக சென்னை மாநகராட்சி தலைமையகத்தில் உள்ள மழைநீர் வடிகால் துறையின் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது பணிக் காலம் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த காரணத்தினால் பணி ஓய்வு பெற இருந்தார். இதற்கிடையில் இவருக்கு 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி கடந்த அதிமுக அரசு உத்தரவிட்டது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 6ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருந்த காலத்தில் விஜயகுமாருக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி காபந்து அரசால் உத்தரவிடப்பட்டது. அதன்படி 2021ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முதல் 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை பணிநீட்டிப்பு வழங்கி அரசாணையும் வெளியிடப்பட்டது.இந்நிலையில் இந்த பணிநீட்டிப்பு உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை மாநகராட்சி ஆணையர் கடந்த 13ம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமாருக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு உத்தரவை ரத்து செய்து நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories:

>