மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேஸ் சென்றவர்களுக்கு அபராதம்

சென்னை: மாமல்லபுரம் இ.சி.ஆரில் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் பைக் பந்தயம் நடைபெறுவது தொடர்ந்து கொண்டே உள்ளது. இதனை, கட்டுப்படுத்த மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில், மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார் பைக் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள், அதிவேகமாக பைக்கை ஓட்டி வருபவர்களை தடுத்து அவ்வபோது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் இ.சி.ஆர். ரோடு முக்கிய சாலையாக திகழ்கிறது. இந்த சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இந்த சாலைகளில் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பைக் பந்தயத்தால், மற்ற வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சென்னை, புதுச்சேரி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் பைக் பந்தய வீரர்கள் ஒன்று கூடி, ரேஸ் கிளப் நடத்துகின்றனர்.

அப்படி நடத்துபவர்கள், சாதாரண பைக்கை விட, அதிவேக திறன் கொண்ட நவீன பைக்கையே ஓட்டுகின்றனர். மேலும், அந்த பைக் புறப்பட்டதுமே, அதிவேகத்தின் உச்சிக்கு சென்று, அதிக ஒலி எழுப்பி வரும் பந்தய பைக்குகள் இ.சி.ஆர்., சாலை மாமல்லபுரம், நெம்மேலி, வட நெம்மேலி, திருவிடந்தை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிறு தோறும் சீறி பாய்கிறது. பைக் வரும் வேகத்தை பார்த்து ஒரு சிலர் நிலை தடுமாறு நடுரோட்டில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். அப்படி விபத்தில், சிக்கும் ஒரு சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பைக்  பந்தயம் நடத்தப்படுவதாக செங்கல்பட்டு எஸ்.பி. விஜயகுமாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் இ.சி.ஆர். சாலையில் பைக் பந்தயத்தில் ஈடுபடும் பைக்குகள், போக்குவரத்து விதிமுறையை பின்பற்றாமல் அதிவேகமாக செல்லும் பைக்குகளை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்க போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, மாமல்லபுரம் டி.எஸ்.பி. குணசேகரன் மேற்பார்வையில், மாமல்லபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி தலைமையில், போலீசார் நேற்று காலை  திருவிடந்தையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பைக் பந்தயத்தில் ஈடுபட வந்த பைக்குகள், அதிவேகமாக வந்த பைக்குகளை வேக கட்டுப்பாட்டு கருவி மூலம் கண்டுபிடித்து, 34க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடம் இனி வரும் காலங்களில் பைக் பந்தயத்தில் ஈடுபட்டாலோ அல்லது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வேகமாக வந்தாலோ வழக்கு பதிவு செய்து பைக் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் அறிவுரை கூறி கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

Related Stories:

>