அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு தொழிற்கல்வி குறித்து விழிப்புணர்வு அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு தொழிற்கல்வி குறித்து விழிப்புணர்வு : டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு பரிந்துரை

சென்னை: அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தொழிற்கல்வி குறித்தும், அதில் மாணவர்கள் சேர்க்கை குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்  என டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி  முருகேசன் தலைமையிலான  குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை, தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் இருந்தால், இந்நிலையை சரிசெய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி  த.முருகேசன்  தலைமையிலான இக்குழு தனது  அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஜூலை 20ம் தேதி வழங்கியது.  

அந்த அறிக்கையில், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிற மாநிலங்களில் உள்ள பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் கட்டமைப்புகள் மற்றும் வசதிகளில் சிறப்பாக உள்ளது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தொழிற்கல்விப் படிப்புகளில் சேர்வதில் இடை நிற்றல் இருப்பது புள்ளி விபரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி  மேலும் தரமான கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும்  பாதுகாப்பினை மேம்படுத்த, தொடர்  கண்காணிப்பதற்கான முறைகளை உருவாக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி,  நவீன தகவல் தொழில்நுட்பத்தையும், கருவிகளையும்  பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் குறிப்பாக மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் பாதுகாப்பானதாகவும், சுத்தமானதாகவும் உருவாக்க வேண்டும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தொழிற்கல்வி குறித்தும், அதில் மாணவர்கள் சேர்க்கை குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களின் திறன்களை கண்டறிந்து அதனையும், அறிவுத்திறன்களையும்  மேம்படுத்துவதற்கான முறைகள் குறித்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கிராமப்புற, மலைப் பகுதிகளில் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இடை நிற்றலை குறைக்க வேண்டும்.

 கிராமப்புறங்களில் உள்ள பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளை கண்டறிந்து பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி கல்வி கற்பிக்க மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது உள்ள பாடத்திட்டத்தில்  நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வகையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு மாநில அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை இக் குழு வழங்கி உள்ளதாக தெரிகிறது.

கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி,  நவீன தகவல் தொழில்நுட்பத்தையும், கருவிகளையும்  பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.

Related Stories:

More
>