×

இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான கோயில்களை ஆவணப்படுத்தி பாதுகாக்கும் திட்டம்

* நிதி வசதிமிக்க கோயில்களில் இருந்து நிதியுதவி வழங்க அனுமதி
* ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில், நூற்றாண்டுகள் பழமையான 3,300 கோயில்கள் அடக்கம். இக்கோயில்களுக்கு போதிய நிதி வசதி இல்லாத காரணத்தால் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதனால், பல கோயில்கள் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. கோயில்களை முழுமையாக ஆவணப்படுத்தி பாதுகாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. நிதி வசதிமிக்க கோயில்களில் இருந்து ஆவணம் தயாரிக்கும் திட்டப்பணிகளுக்கு நிதியுதவி வழங்க அனுமதி அளித்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.  

 இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:  மிகவும் சிதிலமடைந்த பழமையான கோயில்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பு திட்டம் தயாரிக்கும் பணிக்கு நிதி வசதியில்லாத கோயில்களுக்கு ஆணையர் பொதுநல நிதியில் இருந்து வழங்க வேண்டி சார்நிலை அலுவலர்களால் முன்மொழிவு சமர்பிக்கப்பட்டு வருகிறது. தொன்மையான சிதிலமடைந்த கோயில்களை ஆவணப்படுத்தி பாதுகாக்கும் திட்ட பணிக்கு காலதாமதம் ஏற்படுவதாலும், அக்கோயில்களின் நிலை மேலும் பாதிக்கக்கூடும் என்பதாலும், அதை தவிர்க்கும் பொருட்டு தங்களது சரகத்திற்கு உட்பட்ட நிதிவசதிமிக்க கோயில்களில் இருந்து நிதிவசதியில்லாத கோயில்களில் இப்பணியை மேற்கொள்ள நிதியுதவி வழங்க இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

 இப்பணிக்காக நிதி வசதியில்லாத கோயில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி தொகையினை நிதிவசதி மிக்க கோயில்களில் இருந்து துறையின் விதிகளுக்குட்பட்டு உரிய வழியில் விடுவித்து பின்னர் ஆணையருக்கு முன்மொழிவு சமர்ப்பித்து ஆணையர் பொதுநல நிதியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Department of Hindu Religious Affairs , Hindu Temple, Centuries-Old Temple, Preservation Project
× RELATED ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வைணவ...