×

வீணான ஆட்டோ மொபைல் உதிரிபாகங்களில் வடிவமைப்பு மெரினாவில் கடல்வாழ் உயிரின உலோக சிற்பங்கள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னையை அழகாக்கும் விதமாக வாகன கழிவுகளால் உருவாக்கப்படும் 14 வகையான சிற்பங்களை சென்னை மாநகராட்சி உருவாக்கி வருகிறது. வழக்குகளில் சிக்கிய வாகன கழிவுகள் மற்றும் புதுப்பேட்டை, பேசின்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி வாகனங்கள் பழுது நீக்கும் நிலையங்களில் உள்ள காலவதியான வாகன கழிவுகளில் மீன், நண்டு, ஜல்லிக்கட்டு காளை, பரதநாட்டியம், மிருதங்கம், இறால், விவசாயி உள்பட 14 வகையான சிற்பங்களை வடிவமைக்க சென்னை மாநகராட்சியால் திட்டமிடப்பட்டு, அந்த பணிகள் திருவான்மியூரில் நடைபெற்றது. இப்போது சென்னை மெரினா கடற்கரையில் புல் வெளிகளில் மீன், நண்டு, இறால் உள்ளிட்ட 3 அழகான பிரம்மாண்ட உலோக சிற்பங்கள் வைக்கும் பணி நடந்து வருகிறது.

இதனை மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். மேலும், அந்த சிற்பங்கள் முன்பு செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்த உலோக சிற்பங்கள் மெரினாவில் அமைக்கும் பணி முழுமையாக முடியும் முன்பு, இவை பொதுமக்களிடைய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இந்த பணிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘மெரினாவில் வைக்கப்பட்டது போல, தலைமை செயலகம், விமான நிலையம், பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில், இந்த உலோக சிற்பங்களை வைக்கும் பணி ரூ.29 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது’’ என்றார்.

Tags : Chennai Corporation Action , Auto Mobile Parts, Marina, Marine Life Metal Sculptures, Chennai Corporation
× RELATED முறைகேடு எதிரொலி சென்னையில் ₹250 கோடி டெண்டர்கள் ரத்து; மாநகராட்சி அதிரடி