திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் உட்பட 6 மாவட்ட அதிமுக அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்: பாமக, தேமுதிக உள்ளிட்ட மாற்று கட்சியினரும் ஐக்கியம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, அமமுகவைச் சேர்ந்த 6 மாவட்ட நிர்வாகிகள், அதிமுக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், அவரது மகன் வ.து.ந.ஆனந்த் உட்பட பல்வேறு மாற்றுக்கட்சியினர் நேற்று திமுகவில் இணைந்தனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார். கடந்த மூன்று மாதங்களாக திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு நலத்திட்டங்கள் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்தது. அதன் தீவிரத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்தார். அதை தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவரது நிர்வாகத் திறமையை பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் பாராட்டி வருகின்றனர்.

அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட மாற்று கட்சியினர் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சை, தருமபுரி, சேலம், நாமக்கல், ராமநாதபுரம், குமரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த அதிமுக, அமமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏ, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

 அப்போது, நாமக்கல் தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் பி.பி.சாமிநாதன் தலைமையில் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் எம்.டி.வைரமணி, ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, தர்மராஜ், கலாநிதி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, சார்பு அணி நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். சேலம் மத்திய மாவட்ட அமமுக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.இ.வெங்கடாஜலம் தலைமையில் பகுதி செயலாளர்கள் சுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கே.சரவணன், பொதுக்குழு உறுப்பினர் மாரீஸ் என்ற மாரியம்மாள், ஒன்றிய செயலாளர் எம்எல்பி.முருகன், அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரிவு மாவட்ட முன்னாள் செயலாளர் அருள் புஷ்பராஜ், எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் ஜி.குமார் உட்பட 30க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் அணி மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட அமமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வ.து.ந.ஆனந்த் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் நாகநாதன், முத்திஸ்வரன், நகாச்சி கணேசன், முருகபூபதி, ரெத்தினமூர்த்தி, சிவகுமார், ராஜாராம்பாண்டியன், செந்தில்குமார், பத்மநாபன், பச்சைக்கண்ணு, முருகேசன், ராமமூர்த்தி உட்பட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கவுன்சிலர்கள், 10 ஊராட்சி மன்ற தலைவர்கள், 4 ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.கன்னியாகுமரி மாவட்டம், அதிமுக மாவட்ட துணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.ராஜன் தலைமையில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், மாநில இலக்கிய அணி  துணைச் செயலாளர் நாஞ்சில் டொமினிக், மாவட்ட இணைச் செயலாளர் டி.லதா ராமசந்திரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் டி.மஹாஜி செல்வகுமார்,  ஒன்றிய அவைத்தலைவர் வி.ராமசந்திரன் உட்பட மாவட்ட, ஒன்றிய , நகர, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

 ஈரோடு மாவட்ட அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பிக்கள் பி.ஜி.நாராயணன், என்.ஆர்.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ காங்கேயம் செல்வி முருகேசன், அம்மாப்பேட்டை ஒன்றிய தலைவர் விஜய் நிர்மலா, தாராபுரம் ஒன்றிய துணைத் தலைவர் கோவிந்தராஜ், ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.சரவணபவா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். தருமபுரி  மாவட்டம், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான எம்.ஜி.சேகர் தலைமையில் பேரூராட்சி முன்னாள் தலைவர் என்.கிருஷ்ணன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முருகன், சுமதி, டாலி கே.ரவிச்சந்திரன், தனசேகரன், ரத்தினவேல், ராஜாமணி, பூபேஸ் உள்ளிட்ட அதிமுக, அமமுக, பாமக, தேமுதிகவினர் என 30க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். திருப்பூர் தெற்கு மாவட்டம், அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தலைவர் ப.லட்சுமி, சந்தோஸ்குமார் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

 இந்நிகழ்ச்சியில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச்  செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, மாவட்ட செயலாளர்கள் எஸ்.முத்துசாமி, என்.நல்லசிவம், ஆர்.ராஜேந்திரன், கே.எஸ்.மூர்த்தி, என்.சுரேஷ்ராஜன்,  காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஜெயராமகிருஷ்ணன், அமைச்சர்கள் சக்கரபாணி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மாவட்ட பொறுப்பாளர் தடங்கம்  பெ.சுப்ரமணி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி எஸ்.முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடித்து கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தற்போது திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>