×

அதிகாரிகள் பணி செய்யாவிட்டால் நடவடிக்கை: பொன்னேரி எம்எல்ஏ எச்சரிக்கை

பொன்னேரி: வார நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிவர பணி செய்யாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொன்னேரி சட்டமன்ற தொகுதி மணலி புதுநகரில் இயங்கும் மணலி மண்டல அலுவலகத்துக்கு உட்பட்ட இளநிலை உதவி பொறியாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் சரிவர வேலைக்கு வருவதில்லை. இதனால் அங்குள்ள இ சேவை மையம் உள்பட அனைத்து அலுவலகங்களும் பூட்டியே கிடக்கின்றன. பொதுமக்கள் செல்லும்போது, அங்கு ‘இன்று விடுமுறை’ என நூதனமாக ஸ்டிக்கர் ஒட்டி, ஏமாற்றி வருகின்றனர் என அப்பகுதி மக்கள், பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகரிடம் தொடர்ந்து புகார் செய்தனர்.

இதை தொடர்ந்து மண்டல இளநிலை உதவி பொறியாளர் அலுவலகத்தில், எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேற்று  நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையறிந்ததும், அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அப்போது, தங்களது பகுதியில் கழிவுநீர், குப்பை அகற்றுவது, சுகாதார பணிகள் எதுவும் நடக்கவில்லை. இந்த அலுவலகம் விடுமுறை என ஸ்டிக்கர் ஒட்டி, எந்த நேரமும் பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த அலுவலகத்தை மூடிவிட்டு சாவியை எடுத்து செல்லுங்கள் என ஆவேசத்துடன் கூறினர்.

இதையடுத்து மண்டல உதவி செயற்பொறியாளர் சரவணமூர்த்தி அங்கு சென்றார். அவரிடம், பொதுமக்கள் சார்பில் எம்எல்ஏ சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர், இளநிலை உதவி பொறியாளர் அலுவலகத்தை முறையாக திறக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக சரவணமூர்த்தி உறுதியளித்தார். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் எம்எல்ஏ கூறுகையில், வார நாட்களில் அரசு அலுவலங்களை திறந்து, பொதுமக்களிடம் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சரிவர வேலைக்கு வராமல் அலுவலகத்துக்கு விடுமுறை விடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். ஆய்வின் போது, திமுக நிர்வாகிகள் முரளி, அங்குசாமி, காங்கிரஸ் பிரகாஷ், சுந்தர்ராஜ், பன்னீர்செல்வம், இளவழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

* 3 மாதத்தில் தீர்வு
பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் தலைமை தாங்கினார். ஆரணி திமுக பேரூர் செயலாளர் ஜி.பி.வெங்கடேசன், நிர்வாகிகள் முத்து, கண்ணதாசன், கரிகாலன், வக்கீல் ரமேஷ், காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் சுகுமார், நகர தலைவர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய், பட்டா மாற்றம், இலவச வீடு, அங்கன்வாடி மையம், பஸ் நிலையம் உள்பட பல்வேறு வகையில் 300 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அதில், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் திராவிட சத்யா என்பவர், ஆரணி பிஞ்சலர் வீதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். கம்மாளர் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என மனு கொடுத்தார். மனுக்களை பெற்று கொண்ட எம்எல்ஏ துரை சந்திரசேகர், உங்கள் மனுக்கள் மீது 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.பின்னர், ஆரணி பிஞ்சலர் வீதியில் மழைநீர் தேங்கி இருந்தது குறித்து ‘தினகரன்’ நாளிதழில் நேற்று படம் வெளியானது. இதுகுறித்து துரை சந்திரசேகர் பிஞ்சலர் வீதிக்கு சென்று மழைநீர் தேங்கிய இடத்தில் பார்வையிட்டார், மேலும், இங்கு மழைநீர் தேங்காமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Tags : Ponneri ,MLA , Action if officers do not work: Ponneri MLA warns
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்