கட்சியினர் மத்தியில் வைரலாகி பரபரப்பு ‘என்னை கட்சியிலிருந்து நீக்க உங்களுக்கு அதிகாரமில்லை’: இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இடைப்பாடி அதிமுக நிர்வாகி

சேலம்: அதிமுகவில் இருந்து என்னை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, இடைப்பாடியை சேர்ந்த நிர்வாகி ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றதால் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இதுபோன்றவர்களை கட்சியிலிருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலத்தை சேர்ந்த நீக்கப்பட்ட நிர்வாகி ஒருவர், அதிமுக தலைமைக்கு விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சேலம் மாவட்டம், இடைப்பாடியை சேர்ந்தவர் சுரேஷ். சேலம் மாவட்ட அதிமுக மீனவரணி செயலாளர் பொறுப்பில் இருந்தவர், கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி, கடந்த 5ம்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுரேஷ் கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில் கூறியிருப்பதாவது:- எனது கட்சிகாரர் கடந்த 1991ம்ஆண்டு முதல், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக உள்ளார். தொடர்ந்து வார்டு பிரதிநிதியாகவும், இதையடுத்து மாவட்ட மீனவரணி செயலாளராகவும், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். தற்போது அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு கொடுத்துள்ளீர்கள். ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமான பிறகு, 5.12.2016 அன்று தொண்டர்கள் அனைவரும் சசிகலாவை பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தோம்.

2017ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க, பொதுச்செயலாளர் என்ற முறையில் அவருக்கே தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது. ஆனால், கட்சி விதிகளில் இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கி கொண்டு, இவர்களாகவே நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது. மிக முக்கியமாக கட்சி விதிகளின் 35வது விதி உட்பிரிவு 12ன்படி, பொதுச்செயலாளருக்கு மட்டுமே ஒரு தொண்டரை நீக்க அதிகாரம் உள்ளது. எனவே, எனது கட்சிகாரரை தாங்கள் கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது. உங்கள் இருவருக்கும் அந்த அதிகாரம் இல்லை. எனவே, 15 நாட்களுக்குள் எனது கட்சிகாரரை நீக்கியது குறித்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசானது சமூக வலைதளத்தில் வைரலாகி அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

* தொண்டர்கள் மட்டுமே நீக்கம்

இதுகுறித்து சுரேஷ் கூறுகையில், ‘‘கட்சிக்கு எதிராக பேசிய முன்னாள் அமைச்சர், கூட்டணி தர்மத்திற்கு மாறாக பேசிய அமைச்சர், பாலியல் புகாரில் சிக்கிய முக்கிய நிர்வாகி என்று பலரை ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் இன்னும் கட்சியில் இருந்து நீக்காமல் உள்ளனர். அதற்கான அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. என்னை போன்று பல ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் எளிய தொண்டர்களிடம், சசிகலா பேசிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக நீக்கி விடுகின்றனர். இது குறித்து விளக்கம் கூட கேட்பதில்லை. இந்த நிலைக்கு முடிவு கட்டவேண்டும் என்பதற்காகவே, என்னை நீக்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்’’ என்றார்.

Related Stories:

>