பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மதிப்பெண்கள் கணக்கிட 25 வரை கெடு நீட்டிப்பு: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு

புதுடெல்லி: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான காலக்கெடுவை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்களின் இருந்து 30 சதவீதமும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து 30 சதவீதமும், 12ம் வகுப்பு யூனிட் தேர்வுகள், பருவத் தேர்வுகள், பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 40 சதவீதமும் மதிப்பெண்கள் எடுக்கப்பட்டு, மொத்த மதிப்பெண் வழங்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி, மாணவர்களுக்கான மதிப்பெண்ணை கணக்கிடும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, பல்கலை கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் சார்பில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் மாநில பாடத்திட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று யுஜிசி.க்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, அனைத்து பாடத்திட்ட பிளஸ் 2 முடிவுகளும் வரும் ஜூலை 31க்குள் அறிவிக்க திட்டமிடப்பட்டது. இதனால், புதிய கல்வியாண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கப்படும். மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என யுஜிசி அறிவித்தது.  

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான கடைசி தேதி இன்றுடன் முடிகிறது. இதனால், மதிப்பெண்களை கணக்கிட்டு வரும் ஆசிரியர்களுக்கு மன அழுத்தமும், பதற்றமும் ஏற்பட்டு தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. அதனால், மதிப்பெண்களை கணக்கிடும் கெடுவை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் மதிப்பெண்களை கணக்கிடும் பணியை முடிக்காத பள்ளிகள், தனித்தனியாக முடிவுகளை அறிவிக்கலாம் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

* 10, 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் தேர்வு

‘சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை நடைபெறும். இவர்கள் உயர்கல்வியில் சேருவதில் அவர்களுக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படாமல் இருக்க அவற்றின் முடிவுகள் குறைந்தபட்ச நேரத்தில் அறிவிக்கப்படும். இவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத வேண்டும்,’ என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்தார்.

Related Stories:

>