×

100% ஆசிரியர்கள் வருகைக்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு: விரைவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுகிறார்

சென்னை: தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தாண்டும் 2வது அலையாக தொற்று பரவியதால் இன்னும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை. இருப்பினும் தொற்றின் பாதிப்பு குறையத் ெதாடங்கியதையடுத்து தமிழகத்தில் படிப்படியாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக கடந்த வாரம் முதல்வர் அறிவிப்பின்படி, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு சுழற்சி முறையில் வந்து தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகளில்  ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து 19ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். தற்போது 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 100 சதவீதம் பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.  மேற்கண்ட வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் பாடக்குறிப்பேடு, செயல்திட்ட குறிப்பேடு, தினமும் எழுதி அதை தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து பெற வேண்டும்.

கல்வி தொலைக்காட்சி கண்காணிப்பு பதிவேடு  தயாரிக்க வேண்டும், கல்வி தொலைக்காட்சி வகுப்புகளில் அளிக்கப்படும் ஒப்படைப்புகளை மாணவர்களுக்கு அனுப்பி எழுத வைத்து, அதை திரும்ப பெற்று மதிப்பீடு செய்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். ஐடெக் கணினிகள் அனைத்தையும் தலைமை ஆசிரியர்கள் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தற்போது 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மட்டும்தான் மாணவர்கள் இருப்பார்கள்.

அவர்கள் அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டிய வகையில் மேற்கண்ட வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 100 சதவீத அளவில் பள்ளிக்கு வந்தால்தான் பாடங்களை மாணவர்களுக்கு முழுமையாக தெரிவிக்க முடியும் என்பதால் அவர்களை முழுமையாக பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார்.

Tags : School Education Department Arrange for 100% Teachers Attendance: Soon the Principal will issue a notice
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...