குமரி சோதனை சாவடிகளில் திடீர் ஆய்வு; ரேஷன் அரிசி கடத்த உதவுகிறவர்கள் மீதும் கடும் நடவடிக்கை: உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. எச்சரிக்கை

நாகர்கோவில்: ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கு உதவி செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. எச்சரித்துள்ளார். குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுகிறது. லாரிகள், டெம்போக்கள், கார்களிலும், ரயில்கள் மூலமும் மூடை, மூடையாக கொண்டு செல்லப்படுகிறது. அவ்வப்போது போலீசார், பறக்கும்படையினர் சோதனை செய்து 3 ஆயிரம் டன், 4 ஆயிரம் டன் என அரிசியை கைப்பற்றி வருகிறார்கள். கொரோனா ஊரடங்கால் மத்திய தொகுப்பில் இருந்தும் கூடுதல் அரிசி வழங்கப்பட்டதன் காரணமாக கடத்தல் பெருமளவில் அதிகரித்தது.

இதை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அரசு குடோன்களிலும் சோதனை மேற்கொண்டனர். ஒரு சில இடங்களில் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டிய அரிசி மூடைகள் கடத்தல் கும்பலுக்கு செல்வதாக வந்த தகவலின் பேரிலும் ஆய்வு நடந்தது. இந்த நிலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. பாஸ்கரன், நேற்று குமரி மாவட்டம் வந்தார். டி.எஸ்.பி. இளங்கோவன், இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசாருடன் இணைந்து எஸ்.பி. நேரடியாக வாகன சோதனை நடத்தினார்.  

கேரளா மாநில எல்லையோர சோதனை சாவடிகளான களியக்காவிளை, நெட்டா போன்ற பகுதிகளில் லாரிகளில் சோதனை நடந்தது. சோதனை சாவடிகளில் பணியில் உள்ள போலீசார் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். பின்னர் போலீசாருடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். குமரி மாவட்டத்தில் யார், யார் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளார்கள் என்பது பற்றி ஆய்வு செய்து, அது தொடர்பான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி. பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

Related Stories:

>