பிரபல நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசதுரோக வழக்கை ரத்து செய்ய கூடாது: கேரள ஐகோர்ட்டில் லட்சத்தீவு போலீசார் மனு தாக்கல்

திருவனந்தபுரம்: லட்சத்தீவு விவகாரத்தில் நடிகை ஆயிஷா சுல்தானாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருக்கிறது. எனவே அவர் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய கூடாது என்று கேரள ஐகோர்ட்டில் லட்சத்தீவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். லட்சத்தீவில் தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா பட்டேலின் மக்கள் விரேத நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் லட்சத்தீவை சேர்ந்த நடிகை ஆயிஷா சுல்தானா கொச்சியில் ஒரு மலையாள தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது லட்சத்தீவில் கொரோனாவை மத்திய அரசு உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று கூறினார்.

இதையடுத்து நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக லட்சத்தீவு போலீசார் தேச துரோக வழக்குபதிவு செய்தனர். இதுதொடர்பாக அவரை போலீசார் லட்சத்தீவுக்கு வரவழைத்து 4 முறை விசாரணை நடத்தினர். இந்தநிலையில் தன் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கை ரத்து செய்ய கோரி ஆயிஷா சுல்தானா கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக விளக்கமளிக்க லட்சத்தீவு போலீசுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து லட்சத்தீவு போலீஸ் சார்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் ஒரு விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகை ஆயிஷா சுல்தானாவின் நடவடிக்கைகள் மர்மமாக உள்ளன.

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். அவரது செல்போனில் இருந்து பல தகவல்கள் மற்றும் சார்ட்டிங்குகளை அழித்து விட்டார். இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. டிவியில் பேசியபோது ெசல்போனை பார்த்து கொண்டே பேசினார். அந்த சமயத்தில் அவர் வேறு யாருடனோ தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்தார். அவரது வங்கி கணக்கு விவரங்களிலும் மர்மங்கள் உள்ளன. இதுதொடர்பாக ஆவணங்களை தர மறுக்கிறார் எனவே ஆயிஷா சுல்தானா மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய கூடாது என குறிப்பிட்டிருந்தனர்.

Related Stories:

>