×

என்எல்சி முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

புதுச்சேரி: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், தங்களை பணிநிரந்தரம் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும் நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் வரும் 24ம் தேதி முதல் போராட்டம் நடத்துவது என ஒப்பந்த தொழிலாளர் சங்கங்கள் கடந்த 7ம் தேதி அறிவித்தன. இதையடுத்து புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மத்திய அரசின் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேற்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

உதவி தொழிலாளர் ஆணையர் சிவகுமார் தலைமை தாங்கினார். என்எல்சி நிர்வாகம் தரப்பில் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை மாலை 5.30 மணி வரை நடந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. கூட்டத்துக்குப்பின் வெளியே வந்த ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு செயலாளர் சேகர் நிருபர்களிடம் கூறும்போது, இரண்டரை மணி நேரம் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி வரும் 24ம் தேதி முதல் போராட்டம் நடத்துவது தொடர்பாக 23ம் தேதி மாலை சங்க நிர்வாகிகளுடன் பேசி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

Tags : NLC , NLC tripartite talks fail
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...