×

அதிமுகவில் இருந்து நீக்க அதிகாரமில்லை: இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு சேலம் நிர்வாகி வக்கீல் நோட்டீஸ்

சேலம்: அதிமுகவில் இருந்து என்னை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, இடைப்பாடியை சேர்ந்த நிர்வாகி ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். பலர் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அதேநேரத்தில் சசிகலாவும் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து போனில் பேசி வருகிறார். இதுபோன்றவர்களை கட்சியிலிருந்து நீக்கம் செய்து, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு நீக்கப்பட்டவர்கள் யாரும் பெரும்பாலும் எதிர்வினையாற்றுவதில்லை. இந்நிலையில், இடைப்பாடியை சேர்ந்த ஒருவர், கட்சியில் இருந்து நீக்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்தவர் சுரேஷ். கட்சியின் சேலம் மாவட்ட மீனவரணி செயலாளர் பொறுப்பில் இருந்தவர், கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி கடந்த 5ம் தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுரேஷ், கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது: எனது கட்சிக்காரர் கடந்த 1991ம் ஆண்டு முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ளார். தொடர்ந்து வார்டு பிரதிநிதியாகவும், இதையடுத்து மாவட்ட மீனவரணி செயலாளராகவும் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். தற்போது அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு கொடுத்துள்ளீர்கள். ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமான பிறகு 5.12.2016 அன்று தொண்டர்கள் அனைவரும் சசிகலாவை பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தோம்.

2017ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க, பொதுச்செயலாளர் என்ற முறையில் அவருக்கே தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது. ஆனால் கட்சி விதிகளில் இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கி கொண்டு, இவர்களாகவே நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது. மிக முக்கியமாக கட்சி விதிகளின் 35வது விதி உட்பிரிவு 12ன்படி பொதுச்செயலாளருக்கு மட்டுமே ஒரு தொண்டரை நீக்க அதிகாரம் உள்ளது. எனவே, எனது கட்சிக்காரரை தாங்கள் கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது.

உங்கள் இருவருக்கும் அந்த அதிகாரம் இல்லை. எனவே 15 நாட்களுக்குள் எனது கட்சிக்காரரை நீக்கியது குறித்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீசானது சேலம் மாவட்டத்தில் கட்சியினர் மத்தியில் வைரலாகி, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : No power to remove from AIADMK: Salem executive lawyer notice to EPS, OBS
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.5-ல் வெளியீடு