×

கொரோனாவால் 2 மாதமாக உயிருக்கு போராடும் நிலையில் அன்பின் அடையாளமாக கணவரின் ‘விந்து’ வேண்டும்! மனைவியின் கோரிக்கையை ஏற்றது குஜராத் ஐகோர்ட்

அகமதாபாத்: உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கணவரின் விந்தணுக்களைப் பாதுகாக்கக் கோரி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி மனு தாக்கல் செய்தார். அதையடுத்து அந்த பெண்ணின் கணவரின் விந்தணுவை பாதுகாக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தம்பதியர் கடந்தாண்டு அக்டோபரில் திருமணம் செய்துகொண்டனர். கனடாவில் வசித்த இவர்கள், திருமணமான நான்கு மாதங்களுக்குப் பிறகு, அதாவது கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்தனர். கடந்த மே மாதம், அந்த பெண்ணின் கணவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வென்டிலேட்டர் ஆதரவில் மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் உள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அவரை சோதித்த மருத்துவர்கள், ‘உங்கள் கணவரின் உடல்நிலை இனிமேல் மேம்பட வாய்ப்பு இல்லை. அவரை இன்னும் 3 நாட்கள் மட்டுமே வென்டிலேட்டர் ஆதரவில் வைத்திருக்க முடியும்’ என்றனர். திருமணமான ஓராண்டுக்குள் தனது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பார்த்து வேதனையடைந்த அந்த பெண், தனது கணவரின் விந்தணுவை எடுத்து, அதன் மூலம் ஒரு தாயாக ஆக விரும்புவதாக மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டார்.

ஆனால் மருத்துவர்கள், கணவரின் அனுமதியின்றி விந்து மாதிரிகளை எடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். இருந்தும், அந்த பெண் தனது மாமியார் மற்றும் அவர்களது உறவினர்கள் சம்மதத்துடன் தனது கணவரின் விந்தணுவை எடுப்பதற்காக குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடினார். ​​கணவரின் உயிருக்கு மருத்துவர்கள் 24 மணிநேரம் மட்டுமே கெடு கொடுத்த நிலையில், அந்த பெண் நீதிமன்றத்தை நாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தனது தீர்ப்பை 15 நிமிட விசாரணைக்கு பின்னர் வழங்கியது.

அதில், ‘சம்பந்தப்பட்ட நோயாளியின் விந்தணுக்களை சேகரிக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. மேலும், அதனை மருத்துவமனை நிர்வாகம் முறையாக பாதுகாக்க வேண்டும். இருப்பினும், அடுத்த உத்தரவு வரும் வரை அந்த பெண்ணுக்கு செயற்கை கருவூட்டல் முறையில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த கூடாது. அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தை நாளை (வியாழக்கிழமை) மீண்டும் விசாரிக்கும்’ என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த பெண் அளித்த பேட்டியில், ‘என் கணவரின் விந்தணுவிலிருந்து தாயாக வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனால் மருத்துவ சட்டம் அதற்கு அனுமதிக்காது என்று கூறினர். கணவரின் விந்தணு எங்களது இருவருக்கும் இடையிலான அன்பின் கடைசி அடையாளமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் கணவரின் உயிருக்கு மிகக் குறைவான நேரம் மட்டுமே உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வென்டிலேட்டர் ஆதரவில் உள்ளார். அவரின் விந்தணுவை எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தும் அதற்கான நடவடிக்கையை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்’ என்றார்.

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, அதில் கூறப்பட்டுள்ள வழிகாட்டல் நெறிமுறைகளை மருத்துவ குழுவினர் படித்து வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவரின் விந்தணுக்களை எடுத்து பாதுகாக்க முடியுமா? என்பது குறித்தும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இருந்தும், மருத்துவர்கள் கூறியபடி இன்றுடன் அவரது உயிருக்கான கெடு முடிவதால், குஜராத்தில் இவ்விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Corona , Having her husband’s ‘sperm’ as a token of love as she has been fighting for her life for 2 months by Corona! Gujarat iCourt approves wife's request
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...