புதிய திட்டங்களை செயல்படுத்தி வளமான தமிழகத்தை ஏற்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழகத்தில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தேவையான தண்ணீர் எப்போதும் கிடைக்க வேண்டும். இதற்கு நீர் நிலைகளை பாதுகாப்பது, நீர் ஆதாரத்தை சேமிப்பது, மழைநீர் வீணாகாமல் இருப்பது, தேவையில்லாமல் தண்ணீரைப் பயன்படுத்துவதையும், வீணாக்குவததையும் தவிர்ப்பது மற்றும் ஆறு, ஏரி, குளம், கால்வாய், கிணறு ஆகியவற்றை முறையாக - ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, கரை எழுப்பி - பராமரிப்பது போன்றவற்றில் தமிழக அரசு ஆண்டு முழுவதும் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் எப்போதும் தேவைக்கேற்ப கிடைத்தால் விவசாயம் செழிக்கும், தொழில் வளரும், மக்களின் வாழ்வாதாரம் மேம்படும், வறுமை ஒழியும், வருமானம் பெருகும், பொருளாதாரம் வளர்ச்சியடையும், நாடும் முன்னேற்றப்பாதையில் செல்லும்.

மத்திய நீர்வாரிய மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டில் 55.32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நீர்ப்பாசனம் நடைபெற வேண்டும். ஆனால் இப்போது 32.71 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே நீர்ப்பாசனம் நடைபெறுகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொண்டு நீர்ப்பாசன பயன்பாட்டு முறையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நீர்ப்பாசனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். அணைகளில் நீரைத் தேக்குவதற்கும், சேமிப்பதற்கும், திறந்து விடுவதற்கும் ஏற்ப பராமரிப்பு, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக விவசாய நிலங்கள் மனைகளாக மாறுவதை தவிர்க்கவும்,

விவசாயிகள் வேறு தொழிலுக்கு செல்வதை தவிர்க்கவும், நிலத்தடி நீரில் கழிவுகள் கலக்காமல் இருக்கவும், விவசாயத்தை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். மேலும் தமிழக அரசு நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல வருங்கால தமிழக விவசாயம், மக்களின் வாழ்வாதாரம், தொழில் போன்ற பலவற்றை கவனத்தில் கொண்டு நீராதாரத்தை பெருக்க, பாதுகாக்க, நீர்ப்பாசன முறையை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வளமான தமிழகத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>