முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 மாவட்ட அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்: அதிமுக உள்ளிட்ட மாற்றுகட்சியினரும் ஐக்கியம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமமுகவைச் சேர்ந்த 6 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், அவரது மகன் வ.து.ஆனந்த் மற்றும் பல்வேறு மாற்றுக்கட்சியினர் இன்று காலை திமுகவில் இணைந்தனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார். கடந்த மூன்று மாதங்களாக திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு நலத்திட்டங்கள் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வராக  மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்தது.

அதன் தீவிரத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்தார். அதை தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவரது நிர்வாகத் திறமையை பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் பாராட்டி வருகின்றனர். அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட மாற்று கட்சியினர் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை தஞ்சை, தருமபுரி, சேலம், நாமக்கல், ராமநாதபுரம், குமரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த அமமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது, 2001- 2006 அதிமுக ஆட்சியின் போது  தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வ.து.நடராஜன் இன்று மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் அவரது மகனும் அமமுக மாவட்ட செயலாளருமான ஆனந்தனும் இன்று திமுகவில் இணைந்தனர். மேலும் சேகர், முன்னாள் அமைச்சர் மகன் பட்டுக்கோட்டை செல்வமும் திமுகவில் இணைந்தனர்.

 மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் 73 பேர், மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜன் ஏற்பாட்டில் திமுகவில் சேர்ந்தனர். இதில் நாகர்கோவில் முன்னாள் எம்எல்ஏ ராஜன் முக்கியமானவர். திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், கடந்த ஆட்சி காலத்தில் அதிமுகவுக்கு மாறினார். இப்போது மீண்டும் திமுகவுக்கு வந்துள்ளார். இவருடன் இன்று தளவாய் சுந்தரத்தின் உதவியாளராக செயல்பட்ட கிருஷ்ணகுமார், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் நாஞ்சில் டோமினிக், மகளிர் அணி துணைச் செயலாளர் லதா ராமச்சந்திரன் உள்பட 73 பேர் திமுகவில் சேர்ந்தனர்.

மேலும், அமமுகவில் இருந்து 14 ஒன்றியச் செயலாளர்கள், 4 நகரச் செயலாளர்கள், 10 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 3 கவுன்சிலர்கள் மற்றும் சேலம் மாவட்ட அமமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான வெங்கடாச்சலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். அவர்களைப் போல அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர். கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடித்து கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தற்போது திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி,  ராஜ கண்ணப்பன், முத்துச்சாமி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை  நிலையச் செயலாளர் பூச்சி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: