×

ஆகச்சிறந்த வகையில் திறமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள்: இந்திய வீரர்களிடம் ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி

கொழும்பு: இலங்கை- இந்தியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி அணி கேப்டன் தசுன் சனகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இ்தையடுத்து களம் இறங்கிய இலங்கை  அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்கள், அசலங்கா 65, கருணாரத்னே ஆட்டமிழக்காமல் 44 ரன் குவித்தனர். இந்திய அணி சார்பில் புவி, சஹல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து, 276 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள், இலங்ைக பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். கடந்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா (13), ஷிகர் தவான் (29) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சியளித்தனர். இதையடுத்து களம் இறங்கிய இஷான் கிஷன் (1) வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். இதனால் 12 ஓவரில் இந்தியா 65 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட் இழந்தது.

4வது விக்கெட்டுக்கு மணீஷ் பாண்டேவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்தது. மணீஷ் பாண்டே 37 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் விக்கெட்கள் சீட்டுக்கட்டை போல சரிந்து கொண்டிருக்க, நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். 44 பந்துகளை சந்தித்த அவர், 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களை விளாசி அவுட்டானார்.

ஹர்திக் பாண்ட்யா டக் அவுட்டானார்.  குருணால் பாண்ட்யா 35 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதனால் 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தத்தளித்தது. 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடியது. யாதவின் விக்கெட்டிற்கு பின்னர் இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் அந்த எண்ணத்தை மாற்றி அமைத்தார் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே ரன் குவிக்க முடியாமல் திணறிய சூழலில் தீபக் சாஹர் இலங்கை பந்துவீச்சை அசால்டாக கையாண்டார்.

சிறப்பாக விளையாடிய அவர் 82 பந்துகளில் 69 ரன்களை குவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில், தான் விளையாடிய முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அவர் அசத்தினார். இந்த ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியில், இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்த வெற்றி குறித்து இந்திய வீரர்களிடம் ஓய்வறையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உற்சாகமாகப் பேசினார். இந்த வீடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில்; ராகுல் டிராவிட் பேசியதாவது; இலங்கை அணிக்கு எதிராக 2-வது ஒருநாள் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறோம். இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும் நான் கவலைப்பட்டிருக்கமாட்டேன். ஆனால், கடைசிவரை போராட வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அது கடைசியில் நடந்து வெற்றியாக அமைந்துவிட்டது. வெற்றி பெறாவிட்டாலும் கூட கடைசி வரை போராடுவது முக்கியம். சிறப்பாகச் செயல்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஆட்டத்தை முழுமையாகப் பார்த்தால், நம்முடைய அணி வீரர்களின் செயல்பாடு சிறப்பாகத்தான் இருக்கிறது. பந்துவீச்சு, பேட்டிங், அனைத்தும் சிறப்பாகவே இருந்தன. பேட்ஸ்மேன்கள் சிறப்பான முடிவையும் அளித்துள்ளார்கள். ஆகச்சிறந்த வகையில் திறமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நாம் எதிரணியை மதிக்க வேண்டும். நான் ஏற்கனவே கூறியதுபோல் இலங்கை அணி மீண்டு வந்துள்ளது. நாம் சாம்பியன்போல் திரும்பி வந்துள்ளோம். வெற்றிக்கான வழியைத் தேடியுள்ளோம். உங்களை நினைத்துப் பெருமையாக இருக்கிறது என கூறினார்.

Tags : Rahul Dravid , Outstanding talent: Rahul Dravid's resilience to Indian players
× RELATED 100வது டெஸ்டில் அவர் பேசியதை...