தமிழக - கர்நாடகா இடையே தொடரும் போக்குவரத்து ரத்து தாளவாடி மலைப்பகுதிக்குச் செல்லும் அரசு பஸ்களில் அலைமோதும் கூட்டம்

*கொரோனா பரவும் அபாயம்

சத்தியமங்கலம் : கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழக -  கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்குள்  மட்டுமே தற்போது பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி மலைப்பகுதிக்கு வழக்கம்போல் அரசு  பஸ்கள் இயக்கப்படுகிறது.

சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம்  சாம்ராஜ்நகர், மைசூர், கொள்ளேகால், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள்  இயக்கப்படாததால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்வோரும், இதேபோல்  கர்நாடக மாநிலத்திலிருந்து சத்தியமங்கலம், ஈரோடு, திருப்பூர், கோவை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வரும் பயணிகளும் மிகுந்த அவதிக்கு  ஆளாகியுள்ளனர்.

இரு மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து இல்லாததால்  கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் தமிழக-கர்நாடக  எல்லையில் தாளவாடி மலைப்பகுதியில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சிக்கோலா  அணை, எல்லக்கட்டை மற்றும் புளிஞ்சூர் வரை கர்நாடக அரசு பஸ்களில் பயணித்து  அங்கிருந்து ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் ஏறி  தாளவாடி பஸ்  நிலையத்திற்கு வந்து சேர்கின்றனர்.

 தாளவாடி பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலத்திற்கு வரும் அரசு பஸ்களில் ஏறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். இதனால்  தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு இயக்கப்படும் அரசு  பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பஸ்களில் அதிகப்படியான பயணிகள்  பயணிப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் சத்தியமங்கலத்தில்  இருந்து தாளவாடி வழியாக சாம்ராஜ் நகர் மற்றும் மைசூருக்கு இயக்கப்படும்  தனியார் பஸ்களும் தற்போது இயங்காததால் அரசு பஸ்களை மட்டுமே பயணிகள்  நம்பியுள்ளனர். இரு மாநிலங்களிடையே பஸ் போக்குவரத்து இல்லாததால் இந்த  நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து  தொடங்கினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என போக்குவரத்து  கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>