×

ஓடை ஆக்கிரமிப்பால் வாகனம் செல்ல வழியின்றி கால் முறிந்த மூதாட்டியை டோலி கட்டி தூக்கிச் சென்ற உறவினர்கள்

*அணைக்கட்டு அருகே பரபரப்பு


அணைக்கட்டு : அணைக்கட்டு அருகே கானாற்று ஓடை ஆக்கிரமிப்பால் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை. இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை அவரது உறவினர்கள் டோலி கட்டி தூக்கி சென்றனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அப்புக்கல் கிராமம் மானியகொல்லை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள கானாற்று ஓடையை அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பாதையாக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், ஓடையின் அருகே  நிலம் வைத்துள்ள தனிநபர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓடை வழியை ஆக்கிரமித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் வேறு வழியில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சென்று வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த  கோவிந்தசாமி என்பவரது மனைவி சின்னகண்ணு(65) நேற்று நிலத்திற்கு செல்லும்போது, தடுமாறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சின்னகண்ணுவை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, ஓடை வழி பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் வர முடியவில்லை. எனவே மூதாட்டியை டோலி கட்டி அரை கிலோ மீட்டர் தூரம் கொல்லைமேடு வரை தூக்கி வந்தனர். பின்னர், அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ஏற்றி கொண்டு கொணவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இச்சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சின்னகண்ணுவின் கணவர் கோவிந்தசாமி கடந்த மாதம் இறந்தபோது அவரது சடலத்தை அடக்கம் செய்ய எடுத்து செல்ல வழியின்றி அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `கானாற்று ஓடை ஆக்கிரமிப்பால் செல்ல வழியின்றி பல இன்னல்களை சந்தித்து வருகிறோம். வழிபிரச்னையால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட எங்கள் கிராமத்திற்கு வருவதில்லை. இதனால் முடியாதவர்களை வேறு வழியின்றி கொல்லைமேட்டில் இருந்து வாகனங்கள் நிற்கும் இடம் வரை தூக்கி செல்கிறோம்’ என்றனர்.

கலெக்டருக்கு எம்எல்ஏ கடிதம்

கானாற்று ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த 15ம் தேதி அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதன்பேரில், அவர் தனிநபர் கட்டுப்பாட்டில் உள்ள கானாற்று ஓடை ஆக்கிரமிப்பை மீட்டு பழையபடி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு நேற்று முன்தினம் பரிந்துரை கடிதம் அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Dolly , Anaikattu,Tolli, Women,
× RELATED இரவின் கண்கள் விமர்சனம்