×

ஆந்திர எல்லையில் மாயமான 11 மீனவர்களை கடலோர காவல்படையினர் மீட்டனர்

சென்னை: ராயபுரத்தை சேர்ந்த மீனவர் ஜான் என்பவருக்கு சொந்தமான விசை படகில் கடந்த 7ம் தேதி காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து டிரைவர் சோமேஷ் தலைமையில் மீனவர்கள் ஜெகன், நீலகண்டன், சூரியநாராயணன், காமேஷ், ராஜூ, சிவாஜி, பாவையா, ரவி, அப்பாராவ், பாபு உள்ளிட்ட 11 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி ஆந்திர மாநிலம், ராமைய்யாபட்டினம் மீனவ கிராமம் அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென விசைப்படகில் காற்றாடி கழன்று கடலில் விழுந்தது.

இதனால் படகு கடல் நீரோட்டத்தில் ஓடத்தொடங்கியது. கடல் நீரும் படகுக்குள் புகுந்தது. இதுகுறித்து அவர்கள் காசிமேட்டில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவசரகால உதவி கேட்டனர். உதவி இயக்குனர் வேலன் இதுகுறித்து கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தார். கடலோர காவல்படை ஆந்திர மாநில எல்லையில் கப்பல் மூலமும் சிறிய ரக ஹெலிகாப்டர் மூலம் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. கடலோர காவல் படை விமானம் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசைப்படகு கிருஷ்ணா பட்டணம் துறைமுகத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததை கண்டுபிடித்தனர். மீன்வளத்துறை சார்பில் அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகிற்கு தகவல் கொடுத்து அந்த பழுதான விசைப்படகை நேற்று நள்ளிரவு கயிறு கட்டி இழுத்து வந்து 11 மீனவர்களை மீட்டனர்.

Tags : Andhra Pradesh , Andhra Pradesh border, fishermen
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...