×

அரசு நாற்றங்கால் பண்ணையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஒன்றியத்தில், உள்ள அரசு நாற்றாங்கால் பண்ணையில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதனை அமைச்சர்கள் கே.ஆர் பெரிய கருப்பன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் பகுதியில் அரசு நாற்றங்கால் பண்ணை உள்ளது. இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், வட்டார நாற்றங்கால் அமைக்கும் திட்டத்தின் மூலம் 20 லட்சம் மதிப்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் கொண்ட நாற்றங்கால் நடும் திட்ட துவக்க விழா நேற்று  நடந்தது. இதில், இந்த பண்ணையில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள் சுற்றியுள்ள ஊர்களில் நட்டு வைத்து வளர்க்கப்படும்.  இந்த விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

பின்னர், பண்ணையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கபட்டுள்ள மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் குப்பை தரம் பிரித்தல் கூடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கரசங்கால் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 500 அத்திமர கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இந்த தோட்டத்தில் கழிவுநீர் குட்டை மற்றும் நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து செரப்பணஞ்சேரி ஊராட்சி ஆரம்பாக்கம் பகுதியில் நடக்கும் காடு வளர்ப்பு திட்ட பணிகளையும் பார்வையிட்டனர்.

அவர்களுடன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் மரியம் பல்லவி பல்தேவ், ஊரக வளர்ச்சி இயக்கக இயக்குனர் பிரவீன் நாயர், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, எம்எல்ஏ செல்வபெருந்தகை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மகளிர் திட்ட அலுவலர்  சீனிவாச ராவ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தினகரன், செரப்பணஞ்சேரி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வி பார்த்தசாரதி ஆகியோர் இருந்தனர். இதை தொடர்ந்து வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் மகளிர் சுயஉதவிக் குழு உற்பத்தி பொருட்களின் கண்காட்சியை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

Tags : Government Nursery Farm , Saplings, Ministers
× RELATED ஜெயக்குமார் மரணத்தில் நிறைய...