பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு: டெல்லி செங்கோட்டையில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை பொதுமக்கள் நுழைய தடை

டெல்லி: பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக டெல்லி செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அன்றைய தினத்தில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப உத்தரப்பிரதேசத்தில் பிடிபட்ட 2 பயங்கரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சதித்திட்டம் அமபலமாகியுள்ளது. ஆபரேஷன் ஜிகாத் என்ற பெயரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று முதல் சுதந்திரதினம்கொண்டாடப்பட உள்ள ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை டெல்லி செங்கோட்டையில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

More
>