×

பெண்களுக்கான சட்டங்கள் என்னவாக இருக்கிறது?

நன்றி குங்குமம் தோழி

கருவிலே பெண்ணுக்கு எதிரான சதி, சிசுக் கொலை என்ற பெயரில் தொடங்கிவிடுகிறது. அதிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பிப் பிழைக்கும் பெண் வளர்ந்த பின் திருமணம் எனும் பெயரில் பல இடங்களில் ஓர் உயிரற்ற பொருளைப்போல் விற்கப்படுகிறாள். சாதி, மத, இனச் சண்டை என்றால் முதல் வசவு பெண்ணுக்குத்தான். இவை தொன்று தொட்டு அமோகமாக நடந்து வருவதால், காலங்கள் மாறினாலும் பெண்களின் வளர்ச்சி ஆமை வேகத்தில்தான் உள்ளது.

இவையெல்லாம் கடந்து, இந்தப் பெரிய ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கு சார்பாக அலை எழாமல் இல்லை. அந்த அலை காலப்போக்கில் பெண்களுக்கான உரிமையை சட்டரீதியாகப் பெறுவதற்கு உதவியது. அவைதான் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டும் சட்டங்கள். இந்த சட்டங்கள் வேலை பார்க்கும் பெண்கள் மட்டுமின்றி குடும்பப் பெண்களுக்கு உதவக் கூடியவையாகவும் உள்ளன.

பெண்களுக்கான சம ஊதிய உரிமை, கண்ணியம் மற்றும் ஒழுங்கை தற்காத்துக் கொள்ளும் உரிமை, பின் தொடரும் ஆண் மீதும் புகார் அளிக்கும் உரிமை, ஒழுங்கற்ற தன்மையைக் கண்டிக்கும் உரிமை, மறைமுகமாகப் புகார் அளிக்கும் உரிமை (virtual complaints), இலவச சட்ட உதவி பெறும் உரிமை,  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், வரதட்சணைக் கொடுமை தடுப்பு சட்டம், பெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு சட்டங்கள், பெண்கள் பணி பாதுகாப்புச் சட்டங்கள், இந்தியத் தண்டனைச் சட்டம்… எனப் பல்வேறு சட்டங்களும், உரிமைகளும் உள்ளன. இப்படி இருந்தாலும் பெண்களுக்கு  இழைக்கப்படும் குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை.

முந்தைய பத்து ஆண்டுகளில்இருந்ததைவிட, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாகத் தேசிய குற்றப் பதிவுகள் ஆணையத்தின், 2015 ஆம் ஆண்டுக்கான புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. 2019ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் தொடர்பாக 550 வழக்குகள் தேசியப் பெண்கள் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஜூலை 18 ஆம் தேதி மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் மாநில வாரியாக 2014 முதல் 2019 வரையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான வழக்குகள் குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசம், டெல்லி, அரியானா, ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளன. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2014 ஆம் ஆண்டில் 1,802 குற்றங்களும், 2015 ஆம் ஆண்டில் 1,626 குற்றங்களும், 2016 ஆம் ஆண்டில் 809 குற்றங்களும், 2017ஆம் ஆண்டில் 1,027 குற்றங்களும், 2018ஆம் ஆண்டில் 1,333 குற்றங்களும், 2019 ஆம் ஆண்டில் 309 குற்றங்களும் நடைபெற்றுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2014, 2015 ஆண்டுகளில் தலா 11 வழக்குகளும், 2016 ஆம் ஆண்டில் 24 வழக்குகளும், 2017, 2018ம் ஆண்டுகளில் தலா 21 வழக்குகளும் 2019ஆம் ஆண்டில் இதுவரையில் ஆறு வழக்குகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்மிருதி இரானி தெரிவித்திருக்கிறார்.

பாலியல் ரீதியாக, பணி தொடர்பாக, உளவியல் ரீதியாக என, பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய தாக்குதல்களில் 40 சதவீதம், தெரிந்த நபர்களாலேயே ஏற்படுகின்றன. இந்நிலையில் பெண்களின் உரிமைகள் காக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க உதவும் சட்டங்கள் இருந்தாலும் இந்நாளில் அவை என்னவாக இருக்கிறது என்பது பற்றி, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி மிருதுலா பட்கர் விவரிக்கிறார்.

இந்தியாவில் சட்டங்கள் பாலின சார்புடையவையா?

இல்லை… நம் முன்னோர்கள் சிறந்த சட்டங்களை வழங்கியுள்ளனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 15 (3), நாட்டிலுள்ள அனைவருக்கும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்திருப்பதோடு,  பெண்கள், குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. பாலின சமத்துவத்திற்கான சட்டங்களே இங்கு இருக்கின்றன. இருப்பினும், பெண்களுக்கு ஆதரவாகவும் சில சட்டங்கள் உள்ளன. சட்டத்தைப் புரிந்துகொள்வதிலும், செயல்படுத்துவதிலும் கவலைக்குரிய பகுதிகள் நிறைய இருப்பதினால் நாட்டில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது.

அடிப்படையில் சட்டம் உண்மையில் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நாம் முயலவில்லை. நமக்குக் கூடுதல் சட்டங்கள் தேவையில்லை. எவ்வளவு சட்டங்கள் இருக்கிறதோ அவ்வளவு மோசடிகளும் இருக்கத்தான் செய்கிறது. தற்போதுள்ள சட்டங்களைப் புரிந்துகொள்வதிலும் செயல்படுத்துவதிலும் நுட்பம் தேவை. ஒவ்வொரு சட்டமும் இயற்றப்படுவதன் நோக்கம் பாராட்டத்தக்கது. இருப்பினும் அந்த சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது சாதாரண மனிதரோ பெண்ணோ தான்.

பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆண்கள் மேல் தவறான புகார்கள் இருந்தால், அவர்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்க முடியுமா?

சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படும்போது நிறைய ‘சொந்த நலன்கள்’ ஆதிக்கம் செலுத்துகின்றன. நல்லாட்சி என்பது சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்துவதிலிருந்து வருகிறது. சமத்துவம் என்றால் என்ன? பாலியல் துன்புறுத்தல் எது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.

சட்டத்தின் தலையீடு எப்போதும் தேவையில்லை. உதாரணமாக, ஒரு ஆண் ஒரு பெண்ணின் தோற்றத்தைப் பாராட்டினால், அவள் அவனுடைய நோக்கங்களை தவறாகப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. பெண்கள் பாராட்டுக்களை மனதார ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதே சமயம், பணியிடத்தில் ஒரு ஆணின் நடத்தை பற்றி ஒரு பெண் தவறாக உணர்ந்தால், அவள் அதைப் பணிவுடன் சுட்டிக்காட்டி, விஷயத்தைச் சரியான முறையில் தீர்க்கவும் முடியும். பெரும்பாலான நிறுவனங்கள் பயனுள்ள HR கொள்கைகளைக் கொண்டுள்ளன. அலுவலகங்களில் பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது அந்த நபரின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு வழக்கின் விவரங்களும் வேறுபட்டவை, ஆகவே ஒருவருக்கென்று சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்க முடியாது.

தனிப்பட்ட காரணங்களுக்காகப் பெண்கள் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தலாமா?

IPC Section 498A, கணவர் கொடுமை செய்யும் ேபாது, பெண்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட சட்டம். இதை தவறாகவும் பயன்படுத்தப்படலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த சட்டத்தினை எச்சரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
கற்பழிப்புக்கான தண்டனையைக் கையாளும் IPC Section 375, 376 சட்டங்கள், ‘தவறான கற்பழிப்பு’ வழக்குகளாகப் பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு சில ஆய்வுகளை உட்படுத்துகிறது.

இந்த பிரிவின்  கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை முதலில் காவல்துறையாலும், பின் நீதிமன்றத்தினாலும் மிகவும் கவனமாக ஆராயப்பட வேண்டும். இதில் சட்டத்தில் ‘ஒப்புதல்’ என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் தவறான கற்பழிப்பு வழக்குகள் அடிக்கடி பதிவு செய்யப்படுகின்றன. திருமணம் செய்வதாகக் கூறி அதன் வாக்குறுதியை மீறுவதும், அத்தகைய வாக்குறுதியுடன் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் உடல் உறவுகளைப் புரிந்து கொள்வதிலும், அதில் பிரதிபலிக்கும் பிரச்சினைகளிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு வயது வந்த, படித்த பெண் உடல் உறவுக்குள் நுழையும் போது அதன் விளைவுகளைப் புரிந்து கொள்வாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, திருமண உறுதிமொழியை அந்த நபரால் நிறைவேற்ற முடியாமல் போகும் பட்சத்தில் அது ‘கற்பழிப்பு’ என்று அழ முடியாது. இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில் மிகப் பெரிய சவால் என்னவென்றால், நமது சமூகம் உடல் மையப்படுத்தப்பட்ட ஒழுக்கத்திற்கும் தாராளமய வாழ்க்கை முறைக்கும் இடையில் சிக்கியுள்ளது.

பொது நபரை சட்டத்தின் பெயரில் அச்சுறுத்துவதை தடுக்க முடியுமா?
 
நமது சமுதாயத்தில் பக்குவ நிலை மேம்பட வேண்டும். மக்களைப் பாதுகாப்பதற்கும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் மகிழ்ச்சி மற்றும் தரமான பொருளாதார வாழ்க்கையை உறுதி செய்வதற்காகவும்தான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும்போது இதுபோன்ற வழக்குகள் நிகழ்கின்றன. பிரபலமான நபரின் அவப்பெயருக்காகவும், தனிப்பட்ட விரோதம் காரணமாக பலர் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இது போன்ற நேரங்களில் நீதிபதிகள் ஒவ்வொரு வழக்கின் நுணுக்கங்களைக் கவனித்து, சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். சட்டம் அனைவருக்குமானது, எனவே இதுபோன்ற வழக்குகளில் ஒருவரது உண்மையை மறைக்க முடியாது.

இந்தியாவில் சட்டங்கள் பாலின நடுநிலையை வகிக்க முடியுமா?

சட்டங்கள் பாலின நடுநிலை வகிக்க, நமது சமூகம் அதற்கான முதிர்ச்சியை அடைய வேண்டும். இருந்தாலும் பெண்களுக்கு எதிராக நிகழப்படும் வன்முறைகளை கண்டித்து சட்டங்கள் பாதிக்கப்படும்  பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்க முனைகின்றன. இந்த சட்டங்களின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்வது அவசியம்.

எதிர் கொண்ட சவால்கள்?


பணியிடத்தில், நான் ஒரு பெண் என்பதால் வித்தியாசமாக நடத்தப்படவில்லை. பெண்கள் பல்வேறு வேலைத் துறைகளில், ஆண் ஆதிக்கம் செலுத்தும் கோட்டைகளில் தங்களை நிரூபிக்கப் பல சவால்களைச் சமாளிக்கிறார்கள். பெண்கள் தங்கள் செயல்திறனை நிரூபிக்கக் கடினமாக உழைக்க வேண்டும். இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும். சவால்கள் நிறைந்த இந்த உலகில், அதைச் சிதறடிக்கும் பெண்கள் உண்மையில் பாராட்டத்தக்கவர்கள்.

பெண்கள் பல்வேறு வேலைத் துறைகளில், ஆண் ஆதிக்கம் செலுத்தும் கோட்டைகளில் தங்களை நிரூபிக்கப் பல சவால்களைச் சமாளிக்கிறார்கள். பெண்கள் தங்கள் செயல்திறனை நிரூபிக்கக் கடினமாக உழைக்க வேண்டும். இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும்.

- அன்னம் அரசு

Tags : women ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது