×

அடுத்த 30 நாட்களுக்குள் 75% பேருக்கு தடுப்பூசி போட்டால் 37 சதவீத உயிரிழப்பை தடுக்கலாம்: ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ‘‘அடுத்த 30 நாட்களுக்குள் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு விட்டால், 3வது அலையில் 37 சதவீத உயிரிழப்புகளை தடுக்கலாம்’’ என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா 3வது அலை அடுத்த ஒரு சில மாதங்களில் தீவிரமடையலாம் என பல்வேறு கணிப்புகள் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) ஆய்வு முடிவுகள் லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘அடுத்த 30 நாட்களில் நாட்டின் 75 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட வேண்டும். அப்படி செலுத்தப்பட்டால் 3வது அலையில் உயிரிழப்புகள் 37 சதவீதம் வரை தடுக்க முடியும். தொற்று பரவல் 26% வரை குறைக்க முடியும்’ என கூறி உள்ளது.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 94 கோடி. கடந்த ஜனவரி 16ம் தேதி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், நேற்று காலை 7 மணி வரை நாடு முழுவதும் 40 கோடியே 64 லட்சத்து 81 ஆயிரத்து 493 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா கூறி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘முதல் 10 கோடி டோஸ் தடுப்பூசி எண்ணிக்கையை எட்ட 85 நாட்கள் ஆனது. தற்போது கடந்த 24 நாளில் 30 கோடியிலிருந்து 40 கோடி டோசாக தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’’ என்றார்.

தடுப்பூசி போட்டு பாகுபலி ஆகுங்கள்
* நாடாளுமன்றத்தின் முன்பாக நேற்று பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘‘தடுப்பூசி போட்டு பாகுபலி ஆகுங்கள். அப்போது மட்டுமே கொரோனாவை எதிர்த்து போராட முடியும். கொரோனாவுக்கு எதிராக தற்போது 40 கோடி பேர் பாகுபலி ஆகி உள்ளனர்’’ என்றார். இந்தியில் பாகு என்றால் தோள் என்று அர்த்தம். தோளில் தடுப்பூசி போடுவதால் வலிமையான தோள் என்ற அர்த்தத்தில் பாகுபலி வார்த்தையை பிரதமர் மோடி பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
* ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 38 ஆயிரத்து 164 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரத்து 229 ஆகும்.
* கடந்த 24 மணி நேரத்தில் 499 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து 108 ஆகும்.

குரங்கு பி வைரஸ்; சீன டாக்டர் பலி
கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இருந்து ‘குரங்கு பி’ எனும் வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கு டாக்டர் ஒருவர் பலியாகி உள்ளார். சீன தலைநகர் பீஜிங்கை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 2 குரங்குகளுக்கு பிரேதப் பரிசோதனை செய்துள்ளார். அதன்பிறகு படிப்படியாக அவர் உடல்நிலை மோசமாகியது. கடந்த மே மாதத்தில் அவருக்கு குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த மே 27ல் மரணமடைந்தார். இவரது எச்சில், ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில், ‘குரங்கு பி’ வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கி ஒருவர் பலியாவது இதுவே முதல் முறை. குரங்குகளுடன் தொடர்புடைய மருத்துவர்கள், பராமரிப்பாளர்களுக்கு இந்த வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags : ICMR , Vaccination, mortality, ICMR
× RELATED இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு...