கோவை பிஷப் ஆபீசில் பயங்கர கோஷ்டி மோதல்: வக்கீல் மண்டை உடைந்தது; போலீஸ் குவிப்பு

கோவை: கோவை பிஷப் ஆபீசில் பயங்கர கோஷ்டி மோதல் நடந்தது. இதில், வக்கீல் மண்டை உடைந்தது. பதட்டத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தென்னிந்திய திருச்சபை பிஷப் அலுவலகம் (சி.எஸ்.ஐ.) உள்ளது. இங்கு, பிஷப் திமோத்தி ரவீந்தர் தலைமையில் ஒரு பிரிவினரும், இன்னொரு எதிர்பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு பிஷப் திமோத்தி ரவீந்தர்  உள்பட 4 பேர் மீது கிறிஸ்தவ ஆலய ஊழியர்களின் பிஎப் தொகையை மோசடி செய்தது தொடர்பாக புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து, கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார், 4 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிஎஸ்ஐ திருச்சபை நிர்வாகக்குழு கூட்டம் ரேஸ்கோர்சில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. பிஷப் திமோத்தி ரவீந்தர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், திருச்சபையில் நடந்த ஊழல் விவகாரம் பற்றி வக்கீல் நேசமெர்லின் பேசினார். அப்போது, பிஷப் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘‘இவ்வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதுபற்றி விவாதிக்க உகந்த நேரம் இதுவல்ல, அதற்கான நேரம் வரும்போது விவாதிக்கலாம்’’ எனக்கூறினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சில நிமிடங்களில் அது கைகலப்பாக மாறியது. இதில், வக்கீல் நேசமெர்லின் உருட்டு கட்டையால் தாக்கப்பட்டார். அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த மோதல் பற்றி தகவல் அறிந்ததும், ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இரு தரப்பினரும் மேலும் மோதிக்கொள்ளாமல் பாதுகாப்பை பலப்படுத்தினர். போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் சிறிது நேரம் நடந்தது. பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இத்திடீர் மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Related Stories:

>