ஜோலார்பேட்டை தொகுதியில் நான் கொடுத்ததை மக்களிடம் கட்சியினர் தராததால் தோற்றேன்: மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி பரபரப்பு பேச்சு

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஒன்றிய, நகர செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி. வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:-  சட்டமன்றத் தேர்தலில் நான் தோல்வியுற்றதை அவமானமாக எடுத்துக் கொள்ளவில்லை. வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு. சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நேரத்தில் 13 சட்டமன்றத் தொகுதிக்கும் தலைமை கழகம் என்னை பொறுப்பாளராக அறிவித்தது. இதனால் ஜோலார்பேட்டை தொகுதியில், உங்களை நம்பி, நான் மற்றவர்களுக்காக பிரசாரம் செய்தேன்.

ஆனால் நான் கொடுத்ததை நீங்கள் முழுமையாக மக்களிடம் தராததால் நான் தோல்வி அடைந்தேன். இதை உங்களிடம் குற்றச்சாட்டாக வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, வீரமணி பாஜ கூட்டணி பற்றி பேசுகையில், ‘‘செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா’’ என்ற கர்ணன் படத்தில் வரும் பாடலை நிர்வாகிகளிடம் மேற்கோள் காட்டினார். நான் தோற்றதற்கு நீங்கள் தான் காரணம் என்று நிர்வாகிகளை பார்த்து முன்னாள் அமைச்சர் பேசியதாலும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து தோற்றதை பற்றியும் வீரமணி பேசியது அதிமுக - பா.ஜனதா கூட்டணி கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More
>