×

திருத்தணி, பெரியபாளையம் கோயில்களில் ஆடிமாத விழா குறித்த கலந்தாய்வு கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில், இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக்கிருத்திகை மற்றும் பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடிமாத விழா தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:

பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் குடிநீரின் அளவு அதிகமாக தேவைப்படும் சூழல் உள்ளது. அதேபோல ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பவானியம்மன் கோயிலில் 14 வாரங்கள் நடைபெறும் திருவிழாவில் 1, 3, 5, 7 மற்றும் 9 வாரங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பக்தர்களின் வருகையின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.  காவல்துறை சார்பாக, கூடுதலாக காவலர்களை பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தவும், போக்குவரத்தினை சீர்செய்யவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

திருத்தணியை பொறுத்தவரை பக்தர்களின் கோரிக்கையாக தெப்பகுளத்தில் சாமி நீராடி விட்டு மேலே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதன் அடிப்படையில் அதற்கான சாத்தியக்கூறுகளை மாவட்ட கலெக்டர் தலைமையில் கலந்தாலோசித்த பின் கொரோனா நோய் காலத்தில் அதிகளவு கூட்டம் சேராமல் தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடித்து அனுமதிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சுதர்சனம், ச.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், க.கணபதி, ஜோசப் சாமுவேல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Adimatha festival ,Thiruthani ,Periyapalayam , Thiruthani, Periyapalayam Temple, Adimatha Festival, Consultative Meeting, Minister
× RELATED திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க...