×

அதிமுக பொதுக்குழு செல்லாது என வழக்கு நிர்வாகிகள் மனுவுக்கு பதிலளிக்க சசிகலாவுக்கு கால அவகாசம்: சிவில் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்க கால அவகாசம் வழங்கி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016 டிசம்பர் 6ம் தேதி மரணம் அடைந்தார். அதன் பின்னர் பொது செயலாளராக அவரது தோழி சசிகலாவையும், துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனையும் அதிமுகவினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். இதன்பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது, 2017 செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. அதில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தனர்.பின்னர் இந்த வழக்குகள் சென்னை நகர சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

கடந்த முறை இந்த வழக்குகள் விசாரனைக்கு வந்தபோது, டி.டி.வி.தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து தான் விலகி கொள்வதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சசிகலா தொடர்ந்து இந்த வழக்கை நடத்த போவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில், சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்ககோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை 30ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Tags : AIADMK , AIADMK has time to respond to petition filed by case executives: Civil court order
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...