×

நெடுஞ்சாலைத்துறை வரலாற்றில் முதன்முறையாக பணிமாறுதல் செய்யப்பட்ட 206 பொறியாளர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

* அதிமுக ஆட்சியில் 7 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் மாற்றம்
* அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை

சென்னை: நெடுஞ்சாலைத்துறை வரலாற்றில் முதன்முறையாக  பணிமாறுதல் செய்யப்பட்ட 206 பொறியாளர்களின் பட்டியல் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருப்பது பொறியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு, தேசிய நெடுஞ்சாலை, நபார்டு மற்றும் கிராம சாலைகள், திட்டங்கள், சென்னை பெருநகரம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம், சென்னை-கன்னியாகுமரி தொழில்தட திட்டம், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் உட்பட 10 பிரிவுகள் உள்ளது. இதில், உதவி பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர், கோட்ட பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், தலைமை பொறியாளர் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில், விருப்பத்தின் பேரிலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதுவும் ஒரு பொறியாளர் 3 ஆண்டுகளுக்கு மேல் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட வேண்டும். குறிப்பாக கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் இருந்தால் அவர்கள் நபார்டு கிராம சாலைகள் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்பது தான் விதி. ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் பொறியாளர்கள் பலர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் பணியாற்ற ஆர்வம் காட்டி வந்தனர். அவர்கள் பதவி உயர்வு, பணியிட மாற்றம் பெற்றது எல்லாம் ஒரே பிரிவில்தான் வழங்கப்பட்டன.

இதனால், மற்ற பிரிவுகளில் பொறியாளர்கள் பற்றாக்குறை காரணமாக சாலை மற்றும் பாலப்பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக, திட்டம் வடிவமைப்பு மற்றும் ஆய்வு, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், நபார்டு கிராம சாலைகள் திட்ட பிரிவில் பணிபுரிவதை பொறியாளர்கள் பலர் விரும்புவதில்லை. பெரும்பாலானோர் கட்டுமானம் பராமரிப்பு பிரிவு என்கிற ஒரே பிரிவில் மட்டுமே பணியாற்றியதில் ஆர்வம் காட்டினர். இதனால், நெடுஞ்சாலைத்துறையில் திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. சில நேரங்களில் தனியார் ஏஜென்சி நிறுவனங்கள் மூலம் சாலை மற்றும் பாலம் வடிவமைப்பு தயார் செய்யும் நிலை தான் இருந்தது. இதனால், அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது.

குறிப்பாக, திட்ட வடிவமைப்பு, ஆராய்ச்சி நிலையம் இருந்தும் தனியாரிடம் வடிவமைப்பு பணிகள் ஒப்படைக்கப்பட்டதால், அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் ஒரே இடத்தில் எத்தனை ஆண்டுகளாக பணிபுரிகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், பலர் 5 முதல் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரிவது அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.  

நெடுஞ்சாலைத்துறையில் பணி மாறுதல் நடைமுறையை கலந்தாலோசனை முறையில் கடைபிடிக்கப்பட்டால், பணி மூப்பு அடிப்படையில் உள்ள மூத்த பொறியாளர்கள் அனைவரும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மூத்த அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் இதர பணிகளுக்கு பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும். இதை தொடர்ந்து 10 தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர், கோட்ட பொறியாளர்கள் ஆகிய அலுவலர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை நடத்தினார். அப்போது, பணி மாறுதலுக்கு உரிய விண்ணப்பம் வரைவு செய்யப்பட்டு, அதில் மாறுதலுக்கு 3 இடங்களை தெரிவிக்குமாறு கோரப்பட்டது. அந்த 3 இடங்களில் ஒரு இடத்தில் பணி மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது.

இந்த உதவி பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர்கள் யார், யார் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான பட்டியல் உடனடியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி ஓமலூர் நபார்டு மற்றும் கிராம  சாலைகள் உதவி கோட்ட பொறியாளர் முகுந்தன் சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அலுவலகத்துக்கும், உளுந்தூர் பேட்டை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு உதவி கோட்ட பொறியாளர் கவிதா தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 திட்ட இயக்குனர் அலுவலகத்துக்கும், திருவள்ளூர் தரக்கட்டுப்பாட்டு கோட்ட உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன் அம்பத்தூர் கட்டுமானம், பராமரிப்பு பிரிவுக்கும் என மொத்தம் 120 பேருக்கும், சென்னை தரக்கட்டுபாட்டு பிரிவு உதவி பொறியாளர் ஜேம்ஸ் மார்ட்டின் நபார்டு மற்றும் கிராமசாலைகள் தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கும், செங்கல்பட்டு கட்டுமான, பராமரிப்பு பிரிவு உதவி பொறியாளர் செந்தில்குமார் சென்னை தரக்கட்டுபாட்டு கோட்ட பிரிவு உதவி பொறியாளர் என 86 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதுவரை நெடுஞ்சாலைத்துறை வரலாற்றில் வெளிப்படையாக பணி மாறுதல் விவரங்கள் வெளியிடப்பட்டு இருப்பது இதுதான் முதல்முறை என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* பணம் இல்லா பணிமாறுதல் தந்த அமைச்சர்
நெடுஞ்சாலைத்துறையில் இதுவரை உதவி பொறியாளர் பணியிடத்துக்கு ரூ.10 லட்சம், உதவி கோட்ட பொறியாளர் ரூ.20 லட்சம், கோட்ட பொறியாளர் ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை, கண்காணிப்பு பொறியாளர்கள், தலைமை பொறியாளர்கள் என்றால் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை பணம் பெற்று பணிமாறுதல் என்கிற நிலை இருந்தது. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பொறியாளர் சங்க  நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி பணி மாற்றத்திற்கு யாரும் கையூட்டு கொடுக்க கூடாது என்று அமைச்சர் எவ.வேலு அறிவுரை வழங்கினார். அதன்பேரில் உதவி பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் என மொத்தம் 206  பேருக்கு முதன்முறையாக பணம் இல்லா பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Publication on the website of the list of 206 engineers who have been transferred for the first time in the history of the highway industry
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...