மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு ராஜகோபாலனை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து மனைவி மனு

சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மாசேஷாத்திரி பள்ளியில் பணியாற்றி வருபவர் ராஜகோபாலன். கடந்த 2015-16ல் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்னாள் மாணவி புகார் அளித்தார். இதையடுத்து, ராஜகோபாலனை கைது செய்தனர். போலீசார் பின்னர் அவரை குண்டர் சட்டத்தில் அடைத்து ஜூன் 24ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். தற்போது ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், தனது கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி ராஜகோபாலனிம் மனைவி சுதா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில்,மாணவி அளித்த புகாரில் 2015ம் ஆண்டு சம்பவம் என்று  குறிப்பிட்டுள்ளார். ஆனால், அப்போது ஆன்லைன் வகுப்புகள் ஏதும் நடைபெறவில்லை.தாமதமாக அளிக்கப்பட்ட புகாரில், செவி வழி தகவலின் அடிப்படையில் வழக்குப்பதியப்பட்டு பாலியல் குற்றவாளி என்று குண்டர் சட்டத்தில் அடைத்தது  சட்டவிரோதம். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றம் நடந்ததாக வழக்கு பதிவு செய்திருப்பது சட்ட விதிகளுக்கு முரணானது.  எனவே, குண்டர் தடுப்பு சட்டத்தில் ராஜகோபாலனை அடைத்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு, சென்னை போலீஸ் கமிஷனர் 4 வாரங்களில் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

Related Stories:

>