×

ஒன்றிய அரசின் 27 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற ஓபிசி சான்றிதழ் பெற ஊதியத்தை கணக்கில் எடுக்கக்கூடாது: 8 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தாலும் தடையின்றி சான்று வழங்க உத்தரவு

சென்னை: ஒன்றிய அரசின் 27 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறும் வகையில், ஓபிசி சான்றிதழ் பெற ஊதியத்தை கணக்கில் கொள்ள தேவையில்லை என்றும், 8 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தாலும் தடையின்றி சான்று வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் முதன்மை செயலாளர் கார்த்திக், பேரிடர் தணிக்கை துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கையில் 27 சதவீத இட ஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வளமான பிரிவினரை (கிரிமி லேயர்) நீக்கி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் இந்திய அரசால் அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறைகளும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.  ஓபிசி சாதி சான்றிதழ் வழங்கும்போது வளமான பிரிவினர் நீக்கம் செய்வது தொடர்பாக பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு அதிகமாக இருக்க கூடாது என்பதை கணக்கிடுவது குறித்த விளக்கங்கள் இந்திய அரசு வெளியிட்டுள்ள குறிப்பாணைகளில் உள்ள மற்ற இனங்களுக்கு பொருந்தாது.
அதன் விவரம்:
உதாரணம் 1: பெற்றோரின் ஆண்டு வருமானமாக ஊதிய வருமானம் ரூ.3 லட்சம், வேளாண்மை வருமானம் ரூ.4 லட்சம், இதர வகையில் வருமானம் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் வருகிறது என வைத்து கொள்வோம்.  இதில், ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்து கொள்ளப்படாமல், இதர வகையில் உள்ள வருமானத்தை மட்டும், அதாவது ரூ.3 லட்சத்தை கணக்கிட்டு அவர்களுக்கு ஓபிசி சான்றிதழ் வழங்கப்படலாம்.

உதாரணம் 2: பெற்றோரின் ஆண்டு வருமானமாக ஊதிய வருமானம் ரூ.25 லட்சம், வேளாண்மை வருமானம் மற்றும் இதர வகையில் வருமானம் எதுவும் இல்லை என்று வைத்து கொள்வோம். இதில், ஊதிய வருமானம் மட்டுமே உள்ளது. இந்த வருமானம் ரூ.8 லட்சத்துக்கு அதிகமாக இருப்பினும், ஊதிய வருமானத்தை கணக்கில் எடுத்து கொள்ளப்படாமல் அவர்களுக்கு ஓபிசி சான்றிதழ் வழங்கப்படலாம்.

உதாரணம் 3: பெற்றோரின் ஆண்டு வருமானமாக ஊதியம் எதுவும் இல்லை. வேளாண்மை வருமானம் ரூ.50 லட்சம், இதர வகையில் வருமானம் எதுவும் இல்லை என்று வைத்து கொள்வோம். இதில், வேளாண்மை வருமானம் மட்டுமே உள்ளது. இது ரூ.8 லட்சத்தை கடந்து இருப்பினும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்து கொள்ளப்படாமல் அவர்களுக்கு ஓபிசி சான்றிதழ் வழங்கப்படலாம்.

உதாரணம் 4: பெற்றோரின் ஆண்டு வருமானமாக ஊதிய வருமானம் ரூ.4 லட்சம், வேளாண்மை வருமானம் 3 லட்சம், இதர வகையில் வருமானம் ரூ.8.10 லட்சம் என்று வைத்து கொள்வோம். இதில், இதர வகையில் வருமானம் ரூ.8 லட்சத்தை கடந்திருக்கிறது. எனவே ஓபிசி சான்றிதழ் வழங்கப்படமாட்டாது.இந்த ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஓபிசி வகுப்பினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும்படி கலெக்டர்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இருப்பினும் ஓபிசி சாதி சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருப்பதாக அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால் ஒன்றிய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த குறிப்பாணைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் படி தகுதியான நபர்களுக்கு வளமான பிரிவினரை நீக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.8 லட்சம் என்ற பெற்றோரின் ஆண்டு வருமானத்தை கணக்கிடும் போது ஊதியம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் இருந்து பெறுகின்ற வருமானத்தை கணக்கில் கொள்ளப்படாமல், ஓபிசி சாதி சான்றுகளை காலதாமதம் இன்றி வழங்கும்படி சாதி சான்று வழங்கும் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : OBC ,United States , Salary should not be taken into account for OBC certification to be availed under 27 per cent reservation of the United Kingdom: Order to issue certificate without restriction despite 8 lakh annual income
× RELATED பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர்...