நவீன தொழில்நுட்ப வழிமுறைகள் அனைத்திலும் திமுகவின் பிரசாரத்தை நடத்த வேண்டும்: இளைஞர் அணியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: மொழி காக்க-இனம் உணர்ச்சி பெற-தமிழ்நாடு மேம்பாடு அடைய இயக்கத்தை நோக்கி இளைஞர்கள் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக  கலைஞரால் 1980ம் ஆண்டு ஜூலை 20ம் நாள் நீதியின் மண்ணாம் மதுரை மாநகரில் திமுக  இளைஞரணி தொடங்கப்பட்டது. என்னுடைய சிந்தனைகள் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி செல்கிறது. பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தின் இளைய பட்டாளத்தை நடத்திச் செல்லும் வாய்ப்பை நான் பெற்றேன். எத்தனை மாநாடுகள்-எத்தனை ஊர்வலங்கள்-எத்தனை போராட்டங்கள்-எத்தனை சிறைகள் - அத்தனையையும் இளைஞரணியின் செயலாளராக நான் இருந்தபோதுதான் சந்தித்தேன்.

நான் இன்று இந்த மாபெரும் இயக்கத்தின் தலைவனாக-பரந்து விரிந்த இந்த தாய்த்தமிழ்நாட்டின் முதல்வராக அமர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது இளைஞரணிதான். என்னை வார்ப்பித்த பாசறைதான் இளைஞரணி.  இளைஞரணியை வழிநடத்தும் பொறுப்பும் கடமையும் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே கட்சிக்காக உழைக்கவும், காலம் பார்க்காமல் செயலாற்றவும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவராக அவர் இருப்பதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். முன்பைவிட அதிகமான இளைஞர்களைக் கழகத்தை நோக்கி ஈர்த்தும், ஏராளமானவர்களை கழக உறுப்பினர்களாக இணைத்தும், அப்படி இணைந்த இளைஞர்களுக்கு கொள்கை வகுப்புகளை நடத்தியும் செயல்பட்டு வருகிறது இளைஞரணி.இந்தச் சிறப்பான பணியை மேற்கொண்டு வரும் இளைஞரணி செயலாளர், துணைச் செயலாளர்கள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

கழகத்தை நோக்கி இளைஞர்கள் வருவதை விட முக்கியமானது அவர்களை கொள்கை ரீதியாக உருவாக்குவதாகும். அதில் கவனமாக உதயநிதி இருப்பதை அறிந்து பாராட்டுகிறேன். இயக்கத்தின் அடித்தளம் என்பது எண்ணிக்கை அல்ல, எண்ணங்கள் தான் என்பதை உணர்ந்து அவர் செயல்பட்டு வருகிறார். இப்படி ஈர்க்கப்பட்ட இளைஞர்களின் திறமையும் ஆற்றலும் மேலும் மேலும் வலுவடைய வேண்டும். திராவிட இயக்கத்தின் வரலாறு  தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட நம் தலைவர்கள் கடந்து வந்த பாதை - நமது கொள்கைகள் - கோட்பாடுகள் ஆகியவற்றை முழுமையாக அறிந்தவர்களாக அனைத்து இளைஞர்களும் உருவாக வேண்டும்.

அப்படி உருவான இளைஞர்கள் இன்றைய நவீன ஊடகங்கள் அனைத்திலும் நம்முடைய கொள்கைகளைக் கொண்டு செல்ல வேண்டும். திமுக அரசின் திட்டங்கள்  சாதனைகள் ஆகியவற்றை தமிழ்நாட்டில் உள்ள அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். இன்றைய தினம் உருவாகி இருக்கும் நவீன தொழில்நுட்ப வழிமுறைகள் அனைத்திலும் நம்முடைய இளைஞர்கள், திமுகவின் பிரசாரத்தை நடத்தியாக வேண்டும். இந்தக் கொரோனா காலத்தில் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், விழாக்கள் நடத்த இயலாது.

ஆனாலும் பல்லாயிரக்கணக்கானவர்களை ஈர்க்கும் மாற்று தொழில்நுட்ப வழிமுறைகள் சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கிறது. இதனை இளைஞரணியினர் பயன்படுத்தி கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். உயர் கல்வி-சிறந்த வேலை வாய்ப்பு-உடல் நலம்-இனிய குடும்பம்-சிறந்த  எதிர்காலம் ஆகியவற்றோடு கட்சி பணியையும் ஆற்றி இளைஞரணியினர் சிறக்க வேண்டும் என்று இந்த நாளில் கேட்டுக் கொள்கிறேன். இளைஞரணியினர் அனைவருக்கும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: