அண்ணாமலை பல்கலையுடன் 4 மாவட்ட கல்லூரிகளை இணைக்க முடிவு: பொன்முடி பேட்டி

சென்னை: தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று அளித்த பேட்டி: விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைகழகம் குறித்த உண்மை நிலை அனைவருக்கும் தெரியும். கடந்த ஆட்சியில் பெயரளவில் ஜெயலலிதா பல்கலைகழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் எந்தவிதமான நிதியையும் அவர்கள் ஒதுக்கவில்லை. மேலும் பதிவாளர் உட்பட எந்த பணியிடங்களும் கடந்த ஆட்சியில் நியமிக்கப்படவில்லை. அண்ணாமலை பல்கலைகழகம் தனிப்பட்ட பல்கலைகழகமாக செயல்பட்டு வருகிறது. கூட்டு பல்கலைகழகமாக செயல்படுவதற்கு தேவையான இடவசதி, கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டுள்ளது. அண்ணாமலை பல்கலைகழகத்தை கூட்டு பல்கலைகழகமாக மாற்றுவதால் நிதிசுமை குறையும்.

அண்ணாமலை பல்கலைகழகத்தை கூட்டு பல்கலைகழகமாக மாற்றி அதனுடன் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை இணைப்பு கல்லூரிகளாக சேர்க்க முடிவு எடுத்துள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு செய்வதற்கு எந்தவிதமான செலவுகளும் செய்ய தேவையில்லை. அதற்கான கட்டமைப்பு வசதிகளை பல்கலைகழகம் கொண்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இத்தகைய நடவடிக்கை பொருளாதார ரீதியாகவும், கல்வி வளர்ச்சி ரீதியாகவும் நல்ல பலனை கொடுக்கும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் ஆகியோரின் தொடர் கோரிக்கைகளை பரிசீலனை செய்து தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>