×

கவலைக்கிடமாக உள்ள மதுசூதனன் உடல் நிலை குறித்து விசாரிக்க ஒரே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி சசிகலா வந்ததால் பரபரப்பு: மருத்துவமனையில் உச்சகட்ட பதற்றம்

சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், உடல் நிலை குறித்து விசாரிக்க ஒரே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா வந்ததால் மருத்துவமனையில் உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். அப்போது அவருக்கு முதலில் ஆதரவளித்த தலைவர்களில் முக்கியமானவர் மதுசூதனன். தற்போது அதிமுக அவைத் தலைவராக இருந்து வருகிறார். வயது மூப்பு காரணமாக அவர் அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அவர் மூச்சுதிணறல் காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் நல்ல நிலையில் இருப்பதாக நேற்று அதிமுக உறுதி செய்தது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் மதுசூதனன் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று அப்போலோ மருத்துவமனை சென்று இருந்தார். அங்கு மருத்துவர்களிடம் மதுசூதனன் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார். அவர் மருத்துவமனையில் இருக்கும்போது, அதே நேரத்தில் இன்னொரு வாகனத்தில் சசிகலா அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார்.

அவர் தனது காரின் முகப்பில் அதிமுக கொடி கட்டி இருந்தார். இதனால் அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் உச்சகட்ட பரபரப்பு தொற்றியது. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வார்கள், பரஸ்பரம் வணக்கம் செலுத்துவார்கள், அல்லது முகத்தை பார்க்காமல் திரும்பி கொண்டு செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு அங்கிருந்தவர்கள் மத்தியில் எழுந்தது. எடப்பாடி பழனிசாமி உள்ளே இருந்ததால், அவர் வெளியேறும் வரை, சசிகலா காரில் வெளியே காத்திருந்தார். ஆனால் நேரம் ஆனதால் உள்ளே செல்ல முடிவு செய்தார்.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமிக்கு, சசிகலா வந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சசிகலாவை சந்திப்பதை தவிர்க்க முடிவு செய்த எடப்பாடி பழனிசாமி, அவசர அவசரமாக அங்கேயிருந்து கிளம்பினார். இதன் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இருவரும் அங்கே வந்து இருந்தனர். ஒருவர் உள்ளே, ஒருவர் வெளியே என்ற நிலை இருந்தது. இதனால் அப்போலோ மருத்துவமனை வளாகம் பரபரப்பாக மாறியிருந்தது.

சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் சம்மந்தம் கிடையாது என்று நேற்று முன்தினம் கூட எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில் கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் தான் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சசிகலா அப்போலோ சென்ற அதேநேரத்தில் அங்கு இருந்ததால் அங்கு சில  நிமிடங்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது. சசிகலா எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வந்த காரணத்தால், அவரின் ஆதரவாளர்களோ  அமமுக நிர்வாகிகளோ யாரும் அங்கு இருக்கவில்லை. நேரடியாக மதுசூதனனின் குடும்ப  உறுப்பினர்களை கண்டு, உடல்நலன் குறித்து கேட்டறிந்துவிட்டு சசிகலா உடனடியாக திரும்பி விட்டார்.

மதுசூதனனின் உடல்நலனை விசாரித்த பின்னர் சசிகலா நிருபர்களிடம் கூறுகையில், “மதுசூதனன், அதிமுக மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். அவருக்கு உடல்நலன் குன்றியதாக அறிந்ததால் நேரில் வந்து விசாரித்தேன். அவர் விரைவில் நலன் பெற வேண்டும்” என்றார். அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் உரையாடி ஆடியோ வெளியிட்டு வருகிறார் சசிகலா. அவருடன் பேசிய அனைவரும் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை, சசிகலா நேரில் சென்று பார்த்து இருக்கிறார். மேலும் சசிகலாவுக்கு எதிரான தர்மயுத்தத்துக்கு முதலில் ஆதரவளித்தவர் மதுசூதனன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சசிகலாவின் மருத்துவமனை வருகை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Edappadi Palanisamy Sasikala ,Madhusudhanan , Tensions at the hospital
× RELATED வீட்டை விற்று பணம் தராததால் ஆத்திரம்...