பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் 2வது நாளாக முடங்கியது

புதுடெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று பூதாகரமாக வெடித்தது. இப்பிரச்னை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், தொடர்ந்து 2வது நாளாக மக்களவை முடங்கியது. பெகாசஸ் ஒட்டுக் கேட்பு மென்பொருள் மூலம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக சர்வதேச பத்திரிகைகளின் புலனாய்வு கட்டுரையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று பூதாகரமாக வெடித்தது.

மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பெகாசஸ் விவகாரத்தை கிளப்பினர். ‘வேலைவாய்ப்பின்மையால் மக்கள் அவதிப்படும் நிலையில், ஒன்றிய அரசோ உளவு பார்ப்பதில் தீவிரமாக இருந்துள்ளது’ என பதாகைகளில் எழுதி அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோஷமிட்டனர். இதனால், அவை தொடங்கி 5 நிமிடத்தில் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை வலியுறுத்தியும் உறுப்பினர்கள் அமைதி அடையவில்லை. இதனால் அடுத்தடுத்து பல முறை அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர், நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதே போல், மாநிலங்களவையிலும் பெகாசஸ் விவகாரம் எதிரொலித்தது. கேள்வி நேரத்தை தொடங்க துணைத் தலைவர் ஹரிவன்ஸ் முயன்ற போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்தனர். இதனால், பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 1 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாள் முழுவதுமாக முடங்கிய நிலையில், 2வது நாளும் மக்களவையில் அலுவல்கள் நடக்கவில்லை. இன்று பக்ரீத் விடுமுறையை தொடர்ந்து, நாளை மீண்டும் கூட்டத்தொடர் நடக்கும்.

* எம்பிக்களை அமைதிப்படுத்திய வெங்கையா நாயுடு

மாநிலங்களவை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதும், அவைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, மாநிலங்களவை பாஜ தலைவர் பியூஸ் கோயல், எதிர்க்கட்சியின் மூத்த எம்பிக்கள் ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், டெரிக் ஓ பிரையன், திருச்சி சிவா ஆகியோரை அழைத்து பேசினார். அவையை சுமூகமாக நடத்த ஆதரவு கோரினார். இதன்பின் மாநிலங்களவையில் கொரோனா தொடர்பாக 4 மணி நேரம் விவாதம் நடந்தது.

* பிரான்சில் விசாரணை

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் பல நாடுகளில் சுமார் 50,000 பேரை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு வெப்சைட் மீடியாபார்ட் மற்றும் 2 பத்திரிகையாளர்கள் அந்நாட்டு சட்டத்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக பிரான்ஸ் சட்டத்துறை விசாரணையை தொடங்கி உள்ளது.

Related Stories: