×

கூடுதல் நடை மேடைகள், பராமரிப்பு பணிமனைகள்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய விரிவாக்க பணிகள் வேகமெடுக்குமா?

நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய பணிகள் 2023ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய 2006-07 ம் ஆண்டு முடிவு செய்து இரண்டு கட்டங்களாக பணிகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதல் கட்ட பணிகள் முடிவு பெற்று இரண்டாம் கட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இரண்டாவது கட்ட பணிகளில் இரண்டு 24 பெட்டிகள் கொண்ட புதிய நடைமேடைகள், ஆறு புதிய ஸ்டேபளிங் லைன்கள் மற்றும் முதல் கட்ட பணியில் முடிக்காமல் உள்ள நடைமேடை 1பி ஆகிய பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

இந்த திட்டங்களுக்கு நிலம் கையகபடுத்துதல், நிதி பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்டது. முன்னாள் மத்திய இணை அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் இருந்த காலத்தில், கிடப்பில் கிடந்த பணிகள் தொடங்கின. அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விரிவாக்க பணிகள் நடக்கின்றன. தற்போது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 550 மீட்டர் அதாவது 24 பெட்டிகள் நீளத்தில் மூன்று நடைமேடைகளும், 18 பெட்டிகள் கொண்ட நடைமேடை 1ஏ யும் சேர்த்து நான்கு நடைமேடைகள் உள்ளன. முனைய விரிவாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக 625 மீட்டர் அதாவது 26 பெட்டிகள் கொண்ட நடைமேடைகள் இரண்டு அமைக்கப்பட இருக்கின்றது.

இந்த நடைமேடை தற்போது ஸ்டேபளிங் லைன்கள் உள்ள பகுதியில் உள்ள நான்கு ஸ்டேபளிங் லைன்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் புதிதாக நடைமேடை அமைய உள்ளது. இது மட்டுமில்லாமல் தற்போது உள்ள நடைமேடை மூன்று எண்ணிக்கையும் 26 பெட்டிகள் நிற்கும் அளவிற்கு நீளம் அதிகரிக்கப்பட இருக்கின்றது. இவ்வாறு பணிகள் நிறைவு பெற்றால் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைமேடை 1ஏ யும் சேர்த்து ஆறு நடைமேடைகள் பயணிகள் பயன்பாட்டிற்காக இருக்கும். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்களின் பெட்டிகளுக்கு அடிப்பக்கத்துக்கு கீழ் சென்று பிரேக், வீல், சாக் அப்சர்வர் மற்ற ஆய்வு மற்றும் வழக்கமான பராமரிப்பு வேலை செய்வதற்கு என தற்போது 24 பெட்டிகள் நீளம் கொண்ட இரண்டு பிட்லைன்களும், 18 பெட்டிகள் கொண்ட ஒரு பிட்லைன்களும் என மொத்தம் மூன்று பிட்லைன்கள் உள்ளன.

இந்த பிட்லைன்களின் எண்ணிக்கையை பொறுத்தே புதிய நெடுந்தூர ரயில்கள் இயக்கப்படும். அதிக பிட்லைன்கள் இருந்தால் அதிக ரயில்கள் இயக்கப்படும். தற்போது இந்த மூன்று பிட்லைன்களில் வைத்து தற்போது நாகர்கோவிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் பராமரிக்கப்படுகின்றன. விரிவாக்கும் திட்டத்தின் கீழ் இனி கூடுதலாக 625 மீட்டர் நீளத்துக்கு அதாவது 26 பெட்டிகள் நீளம் கொண்ட இரண்டு பிட்லைன்கள் அமைக்கப்பட இருக்கின்றது. இது மட்டுமில்லாமல் தற்போது உள்ள மூன்று பிட்லைன்களும் 625 மீட்டர் நீளத்துக்கு அதாவது 26 பெட்டிகள் நீளம் அதிகரிக்கப்பட இருக்கின்றது. இது மட்டுமில்லாமல் வாகன நிறுத்துமிடம், புதிய நடைமேடை மேம்பாலம், கழிவு நீர் சுத்திகரிக்கும் ஆலை, சிக்லைன், குட் ஸ்லைன் போன்ற வசதிகளும் அமைக்கப்பட இருக்கின்றன.

நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்கம் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டால் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து மதுரை, சென்னை வழியாக இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்படும். இது மட்டுமில்லாமல் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொச்சுவேலி, மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களிலிருந்து இயக்கப்பட்டு வரும் ரயில்கள் குமரிக்கு நீட்டிப்பு செய்ய வசதி வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு இயக்கப்பட்டால் குமரி மாவட்ட பயணிகள் யாருமே நெடுந்தூரங்களுக்கு பயணம் செய்ய திருவனந்தபுரம் அல்லது சென்னை செல்லாமல் நேரடியாகவே இங்கிருந்து பயணம் செய்யலாம்.

இவ்வாறு இங்கிருந்து பயணம் செய்தால் நமது மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள் அதிக வளர்ச்சி பெறும் என ரயில்வே பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர். தற்போது பணிகள் வேகமாக நடைபெற்றதால் 2023க்குள் இந்த பணிகள் முடிவடையும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் கோட்ட மேலாளர் முகுந்த் ஆய்வின் போது இந்த பணிகளை வேகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேவையில்லாத ரயில்களை இயக்க கூடாது
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் முனையவசதிகள் வரும் போது இங்கு குமரி மாவட்ட பயணிகளுக்கு தேவையில்லாத கேரளாவுக்கு பயனுள்ள ரயில்களை பராமரிப்புக்கு என கொண்டுவந்து இயக்குவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் குமரி மாவட்ட பயணிகள் வசதிக்காக ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும். திருவனந்தபுரத்தில் நிலவும் இடநெருக்கடியை போக்க வேண்டி அங்கு பராமரிக்கப்பட்டு வந்த ரயில்களில் நாகர்கோவிலுக்கு நீட்டிப்பு என்ற பெயரில் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் திட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்துவார்கள்.

இதை ஒரு போதும் அனுமதிக்ககூடாது என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர். இது மட்டுமில்லாமல் நாகர்கோவிலில் பராமரித்து கேரளா பயணிகள் வசதிக்காக தற்போது இயக்கப்படும் ரயில்களை நாகர்கோவில் - சாலிமார், கன்னியாகுமரி  திப்ருகர் போன்ற நிரந்தரமாக கொச்சுவேலியுடன் நிறுத்த வேண்டும் என்றும் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags : Nagarco , Additional walkways, maintenance workshops: Will the Nagercoil Junction railway station expansion work accelerate?
× RELATED நாகர்கோவில் மாநகராட்சிக்கு 104 தூய்மை...