ரிசார்ட், பண்ணை வீடுகளில் மீண்டும் தலைதூக்கும் ஆபாச பார்ட்டிகள்; மதுவிருந்து நடத்திய நடிகை உட்பட 31 பேர் சிக்கினர்

* பணத்திற்கு ஆசைப்பட்டு இளசுகளின் வாழ்க்கையை சீரழிக்கும் உரிமையாளர்கள்

சென்னை: இந்த இரவுதான் போகுதே போகுதே... இழுத்துகட்ட கயிறு கொண்டு வா நண்பனே  நண்பனே... இங்கே தான் சொர்க்கம் நரகம் ரெண்டும் உள்ளதே... ஆந்தை போலதான்  இரவிலே இரவிலே... கண்ணிரண்டை திறந்து வைக்கலாம் நண்பனே நண்பனே... இங்கேதான்  இன்பம் துன்பம் ரெண்டும் உள்ளதே... என்றென்றும் பகலிலே எதேதோ வழியிலே  பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி கொன்று பொடு இரவிலே பொய்யான வாழ்விலே  மெய்யான இன்பம் இந்த போதைபோல... என்றென்றும் மனதிலே எதேதோ கனவிலே பொல்லாத  ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்று போடு இரவிலே பொய்யாக வாழும் வாழ்க்கை  மேலே மெய்யான இன்பம் இந்த போதையாலே...

இந்த பாடல் வரிகளை மெய்பிக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்) என்றாலே துள்ளளுக்கும், ஆட்டம் பாட்டத்திற்கும், மதுபோதை விருந்துக்கும் பஞ்சமில்லாத பகுதி. பார்ட்டி என்றாலே எல்லோரின் கண்களும், மனமும் இசிஆர் பக்கம்தான் எட்டி பார்க்கும் காரணம் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ரிசார்ட்கள், கோவா உள்ளிட்ட வெளிநாட்டு கடற்கரைகள் போல், கடல் ஒட்டிய பண்ணை வீடுகள், ஓட்டல்கள் என சகலமும் தேடி வரும் இடம். கிழக்கு கடற்கரை சாலை பலநூறு கிலோ மீட்டரை கொண்டது. சென்னை திருவான்மியூரில் தொடங்கி கடலோர மாவட்டமான நாகப்பட்டினம் வரை இந்த சாலை செல்கிறது.

இதில், திருவான்மியூர் முதல் புதுச்சேரி வரை உள்ள பண்ணை வீடுகள், ரிசார்ட்கள், உலக தரம் வாய்ந்த நட்சத்திர ஓட்டல்கள் என அனைத்திலும் வார இறுதி நாட்களில் அதிரும் ஸ்பீக்கர்கள், போதையில் இளம்பெண்கள் முதல் நடிகைகள் வரை குத்தாட்டங்கள், எட்டு திசைக்கும் பறக்கும் மதுபாட்டில்கள் என களைக்கட்டும்.  சமீப காலமாக ரிசார்ட், பண்ணை வீடுகளில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், பிறந்தநாள் மற்றும் பாசுலர்ஸ் பார்ட்டி, குறும் படம் உள்ளிட்ட சினிமா பட படப்பிடிப்பு என பல்வேறு காரணங்கள் சொல்லி பண்ணை வீடுகள், ரிசார்ட் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புக்கிங் செய்யப்படுகிறது.

குறிப்பாக, பண்ணை வீடுகளை சொந்த தேவைக்கு கட்டிவிட்டு, இதுபோன்ற பார்ட்டிகளுக்கு வாடகைக்கு விடுகின்றனர். ஆனால், அங்கு நடக்கிறதோ வேறு. மது உள்ளிட்ட போதை விருந்து முதல் மாது வரை சகலமும் அரங்கேறுகிறது. இதற்காக, தனியாக ஒரு குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த பார்ட்டியில் அரைகுறை ஆடைகளுடன் போதையில் நடனமாடும் இளம்பெண்களுடன் போதை வாலிபர்கள் குத்தாட்டம் போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் போதை உச்சத்திற்கு சென்றதும் எல்லை மீறி செயல்களில் இருவரும் ஈடுபடுகின்றனர். சில இடங்களில் இளம்பெண்களை அரைகுறை ஆடையுடன் ஆட வைத்து ரசித்து பணம் மழை பொழிகின்றனர்.

சில ரிசார்ட்டுகளில் சட்டவிரோதமாக தொழிலை மறைமுகமாக நடத்தி வருகின்றனர். அவ்வப்போது போலீசார் ரெய்டு நடத்தி ரிசார்ட் மற்றும் பண்ணை வீடு உரிமையாளர்களை கைது செய்து, எச்சரித்து அபராதம் விதித்தாலும் ‘ருசி கண்ட பூனை சும்மாவிடுமா என்பது போல’ ஆபாச நடனங்கள், போதை விருந்து தொடர்ந்துதான் இருக்கிறது. குறிப்பாக, புத்தாண்டு நாட்களில் மட்டும் இதுபோல் நடந்து வந்த ஆடம்பர பார்ட்டிகள், தற்போது ஒரு சில இடங்களில் தினமும், பெரும்பாலான இடங்களில் வார இறுதி நாட்களில் அதிகளவில் நடக்கிறது. பொதுவாக பார், டான்சிங் கிளப், ரிசார்ட், பண்ணை வீடு, நட்சத்திர ஓட்டல்களில் கேளிக்கை நிகழ்சிக்கள் மற்றும் பார்ட்டிகளை நடத்தினால் எல்லைக்குட்பட்ட போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளிடம் உரிய அனுமதியை உரிமையாளர்களோ அல்லது பார்ட்டியை நடத்துபவர்கள் பெற வேண்டும்.

இந்த அனுமதி பெற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால், ரிசார்ட் மற்றும் பண்ணை வீடுகளுக்குள் போலீஸ் வர மாட்டார்கள், நாங்கள் பார்த்து கொள்கிறோம் என கூறி மது, மாது விருந்தை நடத்துகிறார்கள். போலீஸ் உயரதிகாரிகள் சோதனைக்கு செல்லும்போது, குடும்பத்தினர் அறை எடுத்துள்ளனர் உள்ளிட்ட காரணங்களை காட்டி அமைதியாக இருக்கும் தோற்றத்தை காண்பித்து தப்பி விடுகின்றனர். அவர்கள் சென்ற பின்பே மீண்டும் போதை ஆட்டங்கள் தொடரும். இதுகுறித்து, அருகில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தே பின்பே உள்ளே என்ன நடக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வரும். இதையடுத்து, போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஆபாச நடனங்கள் பார்ட்டி நடத்தும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.

இதில் வேதனை என்னவென்றால் இந்த பார்ட்டியில் சிக்கும் பெரும்பாலான இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் கல்லூரி மாணவர்கள், மென்பொருள் நிறுவன ஊழியர்கள் மற்றும் பணக்கார வீட்டு பிள்ளைகள். இவர்கள் ஒருநாள் போதைக்கும், ஆபாச நடனங்களுக்கும் மயங்கி தங்களது எதிர்காலத்தை இழக்கின்றனர். கொரோனா காலத்தில் சற்று அடங்கி இருந்த இந்த பார்ட்டிகள் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் கடந்த சனிக்கிழமை ஒரு ரிசார்ட்டில் மதுவிருந்து நடத்திய நடிகை உட்பட 31 பேர் சிக்கி உள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் ராதாகிருஷ்ணா அவென்யூ, எல்.ஆர்.பார்ம்ஸ் சாலையில் உள்ள சுகுனா கார்டன் (எ) பண்ணை வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மது போதையில் ஆண்கள், பெண்கள் என இளைய ஜோடிகள் குத்தாட்டம் போடுவதாக கானத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

அதன்பேரில், கானத்தூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்ட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த சுகுனா கார்டனை ஆய்வு செய்தனர். அங்கு பெண்கள் மதுபோதையில் அரைகுறை ஆடைகளுடன், ஆண்களோடு சேர்ந்து நடனமாடி கொண்டிருந்தனர். விசாரணையில், அங்கிருந்த பெண் ஒருவர்தான் சினிமா நடிகை கவிதாஸ்ரீ என்றும் ராமாபுரத்தை சேர்ந்த ஸ்ரீஜித்குமார்(34) என்பவருடன் இணைந்து சினிமா படப்பிடிப்பு நடத்துவதாக கூறி, பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்து, இந்த இரவு நேர மது விருந்து பார்ட்டியை ஏற்பாடு செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இந்த பார்ட்டியில் நடனமாடிய பெண்களை மற்றும் நடிகை கவிதாஸ்ரீ உடன் சேர்த்து மொத்தம் 16 பேரை எச்சரிக்கை செய்து பண்ணை வீட்டிலிருந்து அனுப்பி உள்ளனர்.

அதேநேரத்தில், இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட ஆண் ஒருவருக்கு ₹5000 கட்டணம் வசூலித்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர், அங்கிருந்த ஜித்குமார் உள்ளிட்ட 15 பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் மீது ஊரடங்கின் போது அரசு உத்தரவை மீறியதாகவும், சட்டத்திற்கு புறம்பாக பன்ணை வீட்டில் மது விருந்து நடத்தியதாக வழக்கு பதிவு செய்துள்னர். அதில், ஒலி பெருக்கி பயன்படுத்தியது, அனுமதி பெறாமல் இந்நிகழ்ச்சி நடத்தியது என 4 வழக்குகள் பதியபட்டுள்ளது. பின்னர், 16 பேரையும் எச்சரிக்கை செய்து போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கானத்தூர் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்விக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அதிகாரி நேற்று பன்ணை வீட்டை பூட்டி சீல் வைத்தார். நடிகை கவிதா தமிழில் காதலன்,  ஜெய் ஹிந்த், மாணிக்கம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுவுக்கு பதிலாக போதை வஸ்துகள்

சமீப காலமாக இளசுகள் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து வருகின்றனர். மதுவுக்கு பதிலாக தற்போது கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வகையாக போதை பொருட்களை சிகரெட்டுகளில் அடைத்து அடிக்கின்றனர். இதில் இரண்டு முறை புகைத்தாலே வேறு உலகத்திற்கு சென்று விடுகின்றனர். அங்கு என்ன நடக்கிறது என என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. இதில் பெண்களும் விதி விலக்கு அல்ல. இதனால், இசிஆர் உள்ள ரிசார்ட்களில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களே வாங்கி வைத்து சப்ளை செய்து வருகின்றனர். குறிப்பாக, இதுபோன்ற விற்பனைக்கு பல இடங்களில் சிறுவர்கள் தலைவனாக செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, போதை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரவும், இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் பலரது குடும்பங்களை பாதுகாக்கவும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி அனுமதியில்லாத ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள் மற்றும் ஓட்டல்களுக்கு சீல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>