×

கடலூரில் 10 மணிநேரம் நீடித்த போராட்டம் நள்ளிரவில் முடிவுக்கு வந்தது: ஆட்சியர் பேச்சுவார்த்தையில் சமரசம்

கடலூர்: கடலூரில் சுருக்குமடி வலைக்கு ஆதரவாக 10 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டம் ஆட்சியர் பேச்சுவார்த்தை காரணமாக நள்ளிரவில் முடிவுக்கு வந்தது. சுருக்கு மடி வலை ஆதரவாக  கடலூர் மாவட்டத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு பகுதி மீனவர் ஆதரவாகவும் மற்றொரு தரப்பு எதிராகவும் உள்ளனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதற்கிடையே நேற்று தேவனாம்பட்டினம்  மற்றும் ராசாபேட்டை உள்ளிட்ட கிராமங்களிலும் சுருக்குமடி வலைக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மீனவ பெண்கள்  கடலூர் பாரதி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இந்த பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டு மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் நள்ளிரவு 12 மணி அளவில் முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் கூறுகையில்‘‘சுருக்கு மடி வலை பயன்பாடு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆதரவுத் தரப்பினர் அனுமதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இழுவை வலை பயன்படுத்துவோர் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். சட்டத்திற்கு உட்பட்டு விதிமுறை மீறல் இல்லாமல் மீன்பிடி பணியை சுமுகமாக மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

Tags : Cadalur , The 10-hour protest in Cuddalore ended at midnight: the collector negotiated a compromise
× RELATED மூதாட்டி காலை கடித்து குதறிய முதலை