‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 1,000 பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு: 2 ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் வெளியீடு

புதுடெல்லி: இந்தியாவில் 1,000 செல்போன் எண்கள் ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், அவற்றில் 2 ஒன்றிய அமைச்சர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட பிரபலங்கள் யார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் நாட்டின் ‘பெகாசஸ்’ என்ற ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம் ஒன்றிய அரசின் இரு அமைச்சர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள், 40 பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என சுமார் 300 பேரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்விவகாரத்திற்கு மத்தியில் நேற்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது.

முதல் நாளிலேயே ஒட்டுக் கேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், அவை நடவடிக்கைகள் முடங்கியது. எதிர்கட்சிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. எனினும், ‘குறிப்பிட்ட யாரையும் உளவு பார்க்கவில்லை, அவர்களின் செல்போனும் ஒட்டுக்கேட்கப்படவில்லை. ஒட்டுக் கேட்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையான வலுவான ஆதாரங்களும் இல்லை’ என ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கூறினார்.  பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி காங்கிரஸ் வலியுறுத்தியது. இந்நிலையில், செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் யார் யாருடைய  பெயர்கள் உள்ளன என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா, ஒன்றிய ரயில்வே, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,  ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் பிரஹ்லாத் படேல், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், மேற்குவங்க முதல்வர்  மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக ‘தி ஒயர்’ இணைய தளம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து சுமார் 1,000 செல்போன் எண்களின் தரவுகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், அவற்றில் 300 எண்கள் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ராகுல்காந்தி பயன்படுத்திய இரண்டு செல்போன் எண்கள், அவரது உதவியாளர்கள், நண்பர்கள் பயன்படுத்திய எண்களும் ஒட்டுக் கேட்பு எண்கள் பட்டியலில் உள்ளன. ராகுல்காந்தியின் செல்போன் உரையாடலை கடந்த 2018ம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து 2019ம் ஆண்டு நடுப்பகுதிக்கு இடையில் ஒட்டுக்கேட்க முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் தேர்தல் ஆணையர் லாவாசாவின் செல்போன் எண்ணானது, சந்தேகத்திற்கிடமான இலக்குகளின் பட்டியலில் உள்ளதாகவும், ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அவரது மனைவியின் பெயரில் உள்ள செல்போன் எண்களும் பட்டியலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் படேல் செல்போனுடன், அவரது மனைவி உட்பட குறைந்தது 15 செல்போன் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல்பாட்டாளர் பிரவீன் தொகாடியா, பாஜக செயற்பாட்டாளர்களின் சில உதவியாளர்கள் பெயர்களும் உள்ளன.

மேற்கு வங்காள தேர்தலின்போது கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக, ஏப்ரல் 28ம் தேதி பிரசாந்த் கிஷோரின்  செல்போன் எண் ஒட்டுக் கேட்கப்பட்டதாக, அம்னஸ்டியின் தடயவியல் பகுப்பாய்வு கண்டறிந்து உள்ளது. மேலும், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்த உச்சநீதிமன்ற பெண் ஊழியர், அவரது கணவர் மற்றும் அவரது சகோதரர்களுடன் ஒரு நபரின் செல்போன் எண் தொடர்பில் இருப்பதாக ‘தி ஒயர்’ தெரிவித்துள்ளது. இந்தியாவில் 300 பேரின் செல்போன் எண்கள் ஒட்டுக்கேட்பப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது 1,000  செல்போன் எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நாட்டின் அரசியல், அதிகாரத்துவமிக்கவர்களின் பெயர்கள் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாக். பிரதமர் இம்ரான்கானும்..!

‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் செல்போன் எண்ணும் உள்ளது. அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணை ஒரு முறை பெகாசஸ் குறிவைத்ததாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories:

>