அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கு!: பதில் மனு தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அவகாசம்..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று சசிகலா தரப்பில் கேட்டுக் கொண்டதால் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் வழக்கு விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அப்போது அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக்கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு நான்காவது கூடுதல் சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தது. டி.டி.வி. தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை கைவிடுவதாக தெரிவித்தார். தற்போது சசிகலா அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசி வருகிறார்.

அப்போது தாம் தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்க போவதில்லை என்று கூறி வருகிறார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சசிகலா தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் அதிமுக பொதுக்குழு முறைப்படியே நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று சசிகலா தரப்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து வழக்கு விசாரணையை சிட்டி சிவில் நீதிமன்றம் 30ம் தேதி ஒத்திவைத்துள்ளது.

Related Stories:

>