கோதாவரி நதியில் 2022ம் ஆண்டுக்குள் அணை: ஜெகன்மோகன் உத்தரவு

திருமலை: கோதாவரி நதியில் வரும் 2022ம் ஆண்டுக்குள் அணையை கட்டி முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டார். ஆந்திர மாநிலம், கோதாவரி நதியில் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் போலவரம் அணை கட்டும் திட்ட பணிகளை முதல்வர் ஜெகன்மோகன் நேற்று அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். போலவரத்தில் ஹெலிகாப்டரில் தரையிறங்கிய முதல்வர் ஜெகன்மோகன் இந்த திட்டத்தில் பாதிக்கப்படும் குடியிருப்புவாசிகளுடன் பேசினார். அப்போது வெள்ள நிலைமை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். பின்னர் முதல்வர், நீர்ப்பாசன அமைச்சர் அனில்குமார் யாதவ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, போலவரம் அதிகாரிகளிடம் பேசிய முதல்வர், முதலில் வெள்ளத்தை திசைதிருப்பி பணிகளை செய்யவேண்டும். இதில் இடம்பெயர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். அணை கட்டும் பணிகள் அனைத்தையும் 2022ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் காலதாமதம் ஆனாலும் மாநில அரசு நிதியில் இருந்து பணிகளை செய்து பின்னர் மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் காலதாமதம் ஏற்படக்கூடாது என்று தெரிவித்தார்.

Related Stories:

>