×

அரசியல் கட்சி தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து

சென்னை: பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்: விட்டுக்கொடுத்தலும், ஈகை புரிதலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும். அனைவர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும்.

கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்):சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும்.

ராமதாஸ் (நிறுவனர், பாமக):தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் பக்ரீத் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேய திருவிழாவாகும்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாளில் மதச் சார்பின்மையைக் காக்கவும், சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் அனைவரும் உறுதிகொள்வோம்.

ஜி.கே.வாசன் (தலைவர், தமாகா):கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள சூழலில் இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து, பக்ரீத் பண்டிகையை கொண்டாடி பாதுகாப்பாக வாழ வேண்டும்.

அன்புமணி (பாமக இளைஞரணி தலைவர்): அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், மகிழ்ச்சி, வளம் உள்ளிட்ட அனைத்தும் தழைத்தோங்க வேண்டும். அத்தகைய நிலையை உருவாக்குவதற்கு உழைக்க இந்த நன்னாளில்  சபதம் ஏற்போம்.

சரத்குமார் (சமக தலைவர்): உள்ளத்  தூய்மையுடன் கூடிய நம்பிக்கையின் மூலமே இறை அருளை பெற முடியும் என்கின்ற  நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு, உலகில் அமைதியும்,  மகிழ்ச்சியும் நிலைபெற தூய உள்ளத்துடன் பிரார்த்திப்போம்.

என்.ஆர்.தனபாலன்(பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்):தியாகத்தை  போற்றி, ஏழைகளுக்கு கொடுத்து உண்ணும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பக்ரீத்  பண்டிகை வாழ்த்துகள்.

எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழகம் தலைவர்): புத்தாடை அணிந்து, தங்களால் இயன்ற  அளவு மக்களுக்கு இறைச்சி வழங்கி மகிழ்ந்து, தொழுகைகளில் கலந்து  கொள்ளும் வழக்கம் போற்றுதற்குரியது.

வி.எம்.எஸ்.முஸ்தபா(தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்): நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு, சாதி, மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்த உயர்ந்த நாளில் உறுதியேற்போம்.

ஏ.சி.சண்முகம் (புதிய நீதி கட்சி  நிறுவனர்): இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு அளிப்பதே ஈகை. ஈகை செய்வதன் மூலம் இறைவனின் பேரன்பை பெறலாம் என்பது இஸ்லாமியர்களின் இறை  நம்பிக்கையாகும்.

பிரசிடெண்ட் அபூபக்கர்(இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர்): இஸ்லாமியர்கள் அனைவரும் அன்பு, அமைதி, இறை நம்பிக்கை, சமாதானத்தை அனைவருக்கும் போதிக்கும் வகையில் இந்த தியாகத் திருநாளில் உறுதியேற்போம்.


இதே போல தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விசிக தலைவர் திருமாவளவன், திராவிடர் மனித சங்கிலி தலைவர் செங்கை பத்மநாதன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தேசிய தலைவர் அ.ெஹன்றி உள்ளிட்ட தலைவர்களும் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.



Tags : Bakreed , Political party leaders congratulate Bakreed
× RELATED தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு